M K Stalin

“மத நல்லிணக்கம் போற்றி முன்னெடுத்துச் செல்லவேண்டிய தீர்ப்பு” - அயோத்தி தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட முழு உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

மேலும், 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.