India
முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவர்.. 2 பேருக்கு நேர்ந்த சோகம்.. உ.பி-யை உலுக்கிய நிகழ்வு!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அனுஷ்கா திரிவேதி - சவுரப் திரிபாதி தம்பதியினர். இவர்கள் அதே ராவத்பூர் என்ற பகுதியில் எம்பயர் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இளநிலை பல் மருத்துவம் படித்து முடித்துள்ள தம்பதியினர், இந்த மருத்துவமனையில் பல் சிகிச்சை மட்டுமின்றி முடிமாற்று சிகிச்சையும் செய்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் இவர்கள் செய்து வந்த சிகிச்சையால் தற்போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ஜெயா என்ற பெண் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது ஜெயா என்ற பெண் தனது கணவர் வினித் துபே (40) என்பவருக்கு இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் 13-ம் தேதி முடிமாற்று சிகிச்சை செய்துள்ளார்.
இந்த சூழலில் இவருக்கு தொற்று ஏற்பட்டு, முக வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அவர் மறுநாளே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட ஜெயா முதலமைச்சர் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதையடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது விசாரணை மேற்கொண்டபோது, பல் மருத்துவரான அனுஷ்கா சட்டத்தை மீறி முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது மட்டுமின்றி, மருத்துவம் சார்ந்த அனுபவம் இல்லாத நபர்களை உதவுவதற்கு பணியமர்த்தியதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் அனுஷ்கா மீது, குஷக்ரா கதியார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதாவது குஷக்ரா கதியார் அளித்த புகாரில், "எனது சகோதரர் மயங்க் (30) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே எம்பையர் கிளினிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதேநாளில் ஃபருக்காபாத்தில் உள்ள வீட்டிற்கும் திரும்பினார்.
அடுத்த சில மணி நேரத்திலேயே வீக்கம் ஏற்பட்டு, நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2 புகார்கள் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் இனி வெளியே வந்து புகார்கள் கொடுப்பர் என்று எண்ணப்படுகிறது.
பொதுவாகவே ஒவ்வொரு மருத்துவப் படிப்பும், ஒவ்வொரு துறையை சேர்ந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனுஷ்கா மற்றும் அவரது கணவர் பல் சார்ந்த மருத்துவ படிப்பையே முடித்துள்ளனர். ஆனால் முடி சார்ந்து சிகிச்சை என்பது தோல் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை படித்த மருத்துவர்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.
இதனால் அனுஷ்கா சட்டப்படி பெரும் குற்றம் புரிந்துள்ளார். இதன் காரணமாக அவர் மருத்துவ லைசன்ஸ் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அனுஷ்காவுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், தலைமறைவாகியுள்ள அவரை தேடுவதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !