India

இளம் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் கொடூரம்!

பா.ஜ.க ஆட்சி நடந்து வரும் உத்தர பிரதேச மாநிலம் வன்முறைகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போது இளம் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராகவேந்திரா பாஜ்பாய் என்ற இளைஞர் உள்ளூர் நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் தகவல் அறியும் உரிமை ஆர்வலரும் கூட. இந்த இளம் பத்திரிகையாளர் பல முறைகேடுகளை தனது செய்திகள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மஹோலி தாலுகாவில் நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று, சீதாபூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ராகவேந்திரா பாஜ்பாய் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்துள்ளார்.

அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், இளம்பத்திரிகையாளர் ராகவேந்திரா பாஜ்பாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இக்கொலை வழக்கில் குற்றவாளிகள் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

Also Read: புறப்பட்ட சில நிமிடத்திலேயே நின்ற விமானம் : சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பரபரப்பு!