India

புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கு : கைதான 14 பேர் மீதும் பாய்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் !

புதுச்சேரி வில்லியனூரில் கடந்த மார்ச் 26-ம் தேதி மங்கலம் தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளரும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினருமான செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ரவுடி நித்தியானந்தம் என்பவர், தனது கூட்டாளிகள் 6 பேருடன் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன்

மேலும் ரவுடி நித்தியானந்தம் உட்பட கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. அதோடு இந்த வழக்கு விசாரணை உதவிக்காக புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. அதன்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் புதுச்சேரியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி பாஜக பிரமுகர் செந்தில் குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ராஜாமணி உள்ளிட்ட மேலும் 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் வில்லியனூரில் கொலை நடந்த பேக்கரி, வெடிகுண்டு தயாரித்த ஆரியபாளையம் ஓடைவெளி ஆகிய பகுதிக்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 7 பேரிடமும் விசாரணையை முடித்து நேற்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் செந்தில் குமரன் கொலை வழக்கில் கைதான 14 பேர் மீது தேசிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கானது பொதுமக்களை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவை மாநிலத்தில் இனி வெடிகுண்டு சம்பவங்கள் நடந்தால் அதனை நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: “பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !