India

ராமர் கோயிலை வைத்து கோடி கோடியாக லாபம் பார்க்கும் கும்பல்.. அறக்கட்டளை மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக வாங்கப்படும் நிலம் குறித்து தொடர்ச்சியாக ஊழல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட் டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

தசரதா மஹால் கோயில் மடத்தின் 890 ச.மீ நிலம் ராமர் கோயிலுக்காக கடந்த பிப்ரவரியில் வாங்கப்பட்டுள்ளது. இதை நேரடியாக ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு வாங்காமல் அதன் பெயரில் அயோத்தியின் பா.ஜ.க மேயரான ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகனான தீப் நாராயண் ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

இதில், பதிவு பத்திரத்தில் ரூ.20 லட்சம் எனக் குறிப்பிட்டு மீதத்தொகை ரூ.10 லட்சம் ரொக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நிலம், ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு தீப் நாராயண் சார்பில் ரூ.2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழல் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தசரதா மஹால் மடத்தின் தலைவரான மஹந்த் தேவேந்திர பிரசாத், “நாங்கள் விற்பனை செய்தது பல ஆண்டுகளுக்கு முன் அரசிடம் இருந்து பெறப்பட்ட நஜூல் நிலம். எனவே, கிடைத்த விலையே லாபகரமானது என்பதாலும் ராமர் கோயிலுக்காக என்பதாலும் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தோம். ஆனால், அதை ரூ.2.5 கோடிக்கு அறக்கட்டளையினர் வாங்கியது குறித்து எங்களுக்கு தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

கோயில் அருகேயுள்ள மற்றொரு நிலத்தை அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலம், சில நிமிடங்களிலேயே அதிக தொகைக்கு அறக்கட்டளை மூலம் விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read: “15 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான ONGC-யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு” : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!