India

“மக்களை கைவிட்ட மோடி அரசு; தடுப்பூசிகள், ஆக்சிஜனை போல் பிரதமைரையும் காணவில்லை”; ராகுல் காந்தி தாக்கு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால், உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட், டெல்லி, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்கள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியா முழுவதுமே தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசு போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைத் துவக்கி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணியை வேகமாக நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு, இதற்கான தொகையைத் தடுப்பூசி, ஆச்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்த வேண்டும் என 12 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார் என விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருக்கின்றன.

நாடு தற்போது நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கைவிட்டிருக்கிறது. உதவி தேவைப்படுபவர்களுக்காக மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் மரண ஓலம்: கோவாவில் நான்கே நாட்களில் 74 பேர் பலியான அவலம்!