India

'உனக்கு பாதி; எனக்கு மீதி' : ஊரடங்கில் மதுபான கடத்தல் கும்பலுடன் நூதன கூட்டணி - தாசில்தார் கைது!

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே மடுகரை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிரடிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அதிரடிப்படை போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் வேலை பார்க்கும் ஆனந்த் பாபு என்பதும் இவர் கலால் துறை அதிகாரிகள் உதவியுடன் 6 மடங்கு விலை வைத்து மதுபாட்டில்களை விற்று வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அதிரடிப்படை போலிஸார் ஆனந்த் பாபுவை நெட்டப்பாக்கம் போலிஸில் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடையில் ஆய்வு நடத்த வந்த கலால் துறை தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மதுபான கடத்தலுக்கு துணைபோயிருப்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நெட்டப்பாக்கம் போலிஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மது கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கலால்துறை தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கலால் துறை தாசில்தார் கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாசில்தார் கார்த்திகேயன் மதுகடத்தலுக்கு உறுதுநையாக இருக்க மதுபாட்டில்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது. இதில் தொடர்புடையை காவலர்கள் அதிரடியாக இடம்மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உனக்கு பாதி, எனக்கு மீதி என்ற கணக்கில் மதுபான கடத்தலுக்கு துணைபோன தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளதால் கலால்துறை வட்டாரம் ஆட்டம் கண்டுள்ளது.

Also Read: ஊரடங்கு வாழ்க்கை எதிரொலி : "மது கிடைக்காததால் மனநல பாதிப்புக்குள்ளாகும் குடிப்பிரியர்கள்" - தீர்வு என்ன?