கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அதற்கு அடிமையானவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மது அருந்தும் பழக்கம் உள்ள தினக்கூலி தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் வேலைவாய்ப்புகள் பறிபோனதன் காரணத்தினாலும், மதுக்கடைகள் மூடப்பட்டதாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு கடுமையாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 500 மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
புதுச்சேரியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற கிராமப்புற சாராயக்கடைகள் சீல் வைக்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் ஆலப்புழா பகுதியில் கள்ளத்தனமாக மது தயாரித்த கும்பலை அம்மாநில போலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கேரளாவில் மதுவுக்கு அடிமையான 5 பேர் மது குடிக்க முடியாததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஒருசிலர் மனநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, குடிநோயாளிகளுக்கு மருத்துவர் சான்றளித்தால் அவர்களுக்கு மட்டும் மது வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால், இதற்கு இந்திய மருத்துவக்கழகம் தடைவிதித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மது குடிக்க முடியாததால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள ஐ.எம்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்த முடியாததால் அவர்களது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
அவர்களுக்கு மன ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 22 முதல் 55 வயது வரை இருக்கும். இதில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 13 நாட்கள் மிச்சமிருக்கும் நிலையில் குடிநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு மனநலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அசோகன் கூறுகையில், ''குடிப்பழக்கம் என்பது ஒரு சமுதாய நோய். எந்த ஒரு போதைக்கு அடிமையானவர்களும் அதை நிறுத்தும்போது பதட்டமும், வெறித்தனமும், கோபமும் ஏற்படும். இரவில் பிரச்னை அதிகமாக இருக்கும். குழப்பம் இருக்கும். சின்ன எறும்பு கூட யானை மாதிரி தெரியும். பூச்சி பறப்பது போன்று இருக்கும். காதில் சத்தம் கேட்கும். மனம் பிழறும் நிலையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. இந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டும்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குடியை நிறுத்தும்போது, சம்பந்தமில்லாமல் பேசுவார்கள். வலிப்பு நோயும் வரும். கொலை கூட செய்யக்கூடிய அளவுக்கு வெறி வரும். வன்முறையில் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. தினசரி குடிப்பவர்களுக்கு பிரச்னை வரலாம்.
இந்த நேரத்தில் குடும்பத்தினர் இதுபோன்றவர்களிடம் ஆறுதலாக இருக்கவேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளவர்களுக்கு சிகிச்சை தான் உடனடி தீர்வு. நடமாடும் மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று சிகிச்சை செய்யும் முறையை அரசு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரின் சீட்டு அடிப்படையில் மது கொடுப்பதை நான் ஆதரிக்கவில்லை. இது தீர்வாகாது'' என்றார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஸ்வஸ்திக் கூறுகையில், ''உடனடியாக குடியை விடுபவர்களுக்கு ஏற்படும் எரிச்சல், பயம், நடுக்கம், பசியின்மை அளவுக்கு அதிகமாக வரும். மூளை குழப்பநிலைக்குச் செல்லும். இவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வெளிப்புற நோயாளியாகவே சிகிச்சை தரலாம். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தான் மருத்துவமனையில் அனுமதிக்க பட வேண்டும்'' என்றார்.
சென்னை மனநல மருத்துவர் குறிஞ்சி கூறுகையில், ''மது குடித்தவர்கள் எவ்வளவு அளவு மது எடுத்தார்கள் என்பதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குடியை உடனடியாக விட்டால் பல்வேறு குழப்பங்கள் எழும். கனவே நிஜமாகத் தெரியும். 8 மணி நேரத்தில் கைநடுங்கும்.
குடியை நிறுத்தியவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எல்லா மருந்தகங்களிலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்றார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் குடிப்பிரியர்களுக்கு மது கிடைக்காததால் குடும்ப ரீதியான பிரச்னைகள் நிறையவே எழுந்துள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் குடும்ப வன்முறை தொடர்பாக 291 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்றுள்ளன. இந்தப் புகார்கள் ஊரடங்கிற்குப் பிறகு அதிக அளவில் வரும் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் திவ்யா கூறுகையில், ''போதைக்கு அடிமையானவர்களுக்கு இப்போது கஷ்டமான காலம்தான். மது கிடைக்காததால் வன்முறையில் இறங்குவார்கள். நிறைய பிரச்னைகள் எழும் சூழலில்தான் உயிரிழப்புகள் வருகின்றன. படிப்படியாக அவர்கள் தங்கள் பிரச்னையில் இருந்துவிடுபட மனநல மருத்துவர்களை அணுகுவது நல்லது.
எப்பொழுதாவது குடிப்பவர்கள் தங்களுக்கு குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது பழச்சாறு குடிக்கலாம், பிடித்த உணவுகளை சாப்பிடலாம். இதன்மூலம் எளிமையாக இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியேறலாம்.
எந்தவொரு பழக்கத்தையும் 21 நாளில் விட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலருக்கு 48 நாட்களாகவும் இருக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இவர்கள் தங்கள் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆலோசனை அளிக்க சென்னை மாநகராட்சியும், லயோலா கல்லூரியும் இணைந்து ஒரு உதவி மையத்தினை உருவாக்கியுள்ளன. 044- 45680200 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநலம் தொடர்பான ஆலோசனை பெறலாம்'' என்றார்.
தமிழகத்தில் தற்போது, மது கிடைக்காமல் குடிப்பிரியர்கள் மனநலம் பாதிக்கப்படும் சூழலில் தற்கொலை அபாயங்களும் நிறைந்துள்ளன.
இத்தருணத்தில் மனநல மருத்துவர்களின் ஆலோசனைப்படி குடிநோயாளிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.