India

கொரோனா Hotspot பட்டியலில் தமிழகத்தின் 22 மாவட்டங்கள்.. தீவிர கண்காணிப்பு பகுதிகளாக அறிவித்த மத்திய அரசு!

நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 1,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை மே 3 வரை நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்களை Hotspot மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 170 மாவட்டங்களை அதிகம் பாதிக்கப்பட்டதாக (சிவப்பு குறியீடு) மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்டதாகவு வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. மஹாராஷ்டிராவில் 14, உ.பி.,யில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11, டெல்லியில் 10 மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், தேனி நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், கரூர், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: #Corona : “தமிழகத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு; இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர்” - விஜயபாஸ்கர் தகவல்!