India

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு : ‘முதலில் வெறுப்பைக் கைவிடுங்கள்’ - மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தன்னுடைய அரசின் நடவடிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை பொதுமக்களிடம் பகிர்ந்து வருகிறார். உலக அளவில், சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பிரபல தலைவர்கள் வரிசையில், டிரம்புக்கு அடுத்தபடியாக மோடி இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சி.ஏ.ஏ விவகாரம், டெல்லி வன்முறை போன்ற மோடி அரசின் தாக்குதலால் மக்கள் சிதைந்து போய் உள்ளனர். பல இடங்களில் அரசுக்கு எதிராக ஆவேசமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மோடி சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு அளித்தனர். பலரும் இந்த முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து வெளியேறுவதற்கு பதில், வெறுப்பைக் கைவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமர் எதற்காக இந்த முடிவை எடுத்தார், பின்னர் எதற்காக அதை மாற்றிக் கொண்டார் என்ற விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது சமீபத்திய பிரச்சனைகளை திசை திருப்ப எடுத்த முயற்சி என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்” : 7.78% அதிகரித்த வேலைவாய்ப்பின்மை!