இந்திய நாட்டின் பொருளாதார நிலை, வரலாற்றில் இதுவரை அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பா.ஜ.க அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது.
பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பின்மை திண்டாட்டம் சரிசெய்யப்படுமா என பலரும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை. 2020-ல் பெரும் வேலை வாய்ப்பு உருவாகும் என உண்மையை மறைத்து பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் உண்மை நிலவரங்களை பார்த்தோமானால், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 சதவிகிதம் என்ற அளவிற்கு போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதம் மட்டும் வேலையில்லாத் திட்டாட்டம் 7.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேப்போல், கிராமப்புறங்களில் 5.97 சதவீத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டம் பிப்ரவரி மாதத்தில் 7.37 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 9.70 சதவீதத்தில் இருந்த 8.65 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.