India
“மோடி அரசின் ‘கிசான்’ திட்டத்தில் 5.16 கோடி விவசாயிகளுக்கு தவணைத் தொகை வழங்கவில்லை” : RTI மூலம் அம்பலம்!
மோடி அரசு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த பல திட்டங்களை புதிதாக பெயர் வைத்து தங்கள் அரசின் புதிய திட்டம் என்று அறிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. அதன்படி கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியுதவி திட்டத்தை ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்’ என்ற பெயரில் மோடி அரசு அறிவித்தது.
இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். நான்கு மாத கால இடைவெளியில் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
ஆனால், தற்போது வரை திட்டத்தில் 9 கோடி விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், அதிலும் பலருக்கு தவணை முறையில் வழங்கவேண்டிய நிதியுதவி தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர், இந்தத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள் விவரங்கள் பற்றி தகவல் அளிக்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.
இதற்கு விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு முதல் நவம்பர் 2019ம் ஆண்டு வரை 9 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தவணை முறையில் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், பதிவு செய்தவர்களில் 7.62 கோடிப் பேர் அதாவது 84 சதவீதம் விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2வது தவணை தொகை 6.5 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் 3.85 கோடி பேர் மூன்றாவது தவணையை பெற்றுள்ளனர். இதில், 2.51 கோடி விவசாயிகள் 2வது தவணையையும், 5.16 கோடி விவசாயிகள் இதுவரை 3வது தவணையையும் பெறவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக எப்போது நிதியுதவி சென்றடையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, தவணைத் தொகை கிடைக்காமல் விவசாயிகளும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக வாக்குகளைப் பெறுவதற்காக இந்த திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்தது. முறையான திட்டமிடல் இல்லாததால் ஒரு வருடம் ஆனபிறகும் கூட இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல், விவசாயிகளை மோடி அரசு ஏமாற்றி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!