India

“ஊட்டச்சத்து குறைபாடு பற்றி கவலையில்லை; அங்கன்வாடியில் முட்டை வழங்க எதிர்ப்பு” : பா.ஜ.க அராஜகம்!

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாணவர்களுக்கு வாரத்தில் 4, 5 முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் மற்றும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கி வருகின்றனர். ஆனாலும் பல மாநிலங்களில் இத்திட்டம் முறையாகச் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு 97,135 அங்கன்வாடி மையங்களில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட 62 லட்சம் குழந்தைகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்கள் ஏழு லட்சம் பேருக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.கவும் அதன் ஆதரவு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மக்களை அசைவ உணவுப் பழக்கத்துக்கு ஆளாக்கும் முயற்சி என்று அரசுக்கு எதிராக பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு தரப்பில் கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாட்டால் மத்திய பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 43 சதவீதம் குழந்தைகள் குறைவான உடல் எடையுடனும், 26 சதவீதம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல், 51.5 சதவீதம் பழங்குடியினக் குழந்தைகளும், 45.9 சதவீதம் பட்டியலினக் குழந்தைகளும் எடைகுறைவுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, 2016 -ம் ஆண் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வின்படி குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் மத்திய பிரதேசமும் உள்ளது.

இந்தச் சூழலில்தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடைப் போக்க, அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க இதை எதிர்க்கிறது. பா.ஜ.கவிற்கு குழந்தைகள் பற்றிய அக்கறை சிறிதும் இல்லை. காங்கிரஸ் அரசைக் குறைகூறவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “டேய்.. இங்க வாடா” : பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர்! (வீடியோ)