தமிழ்நாடு

“டேய்.. இங்க வாடா” : பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர்! (வீடியோ)

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“டேய்.. இங்க வாடா” : பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

அவருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தார். அப்போது முகாமுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார்.

அப்போது அமைச்சர் வருகையால் அந்தப் பகுதியில் மக்கள் கூடியிருந்தனர். கோவிலுக்கு அருகில் சென்ற அமைச்சர் திடீரென அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார்.

தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்தார். அமைச்சர், மாணவனின் கல்வி பற்றி விசாரிப்பார் என உடனிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், அமைச்சரோ, தனது செருப்பைக் கழற்றிவிடுமாறு சிறுவனிடம் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தச் சம்பவத்தின் போது சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்ததால் சுதாரித்த குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு புகைப்படம் எடுக்காதவாறு மறைத்து நின்றார்.

மேலும், யாரும் படம் எடுக்காதீர்கள் என போலிஸாரும் அதிகாரிகளும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர். சிறுவன் செருப்பைக் கழற்றியதும் அருகில் இருந்த அமைச்சரின் உதவியாளர் அந்த செருப்பை எடுத்து அருகில் வைத்துள்ளார்.

“டேய்.. இங்க வாடா” : பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர்! (வீடியோ)

பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் பெற்றோர் யானைப் பாகன்களாக உள்ளார். இந்தச் சம்பவத்தின்போது கூடியிருந்த பழங்குடியின மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது அப்பட்டமான தீண்டாமைக் கொடுமை என்றும், எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories