
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.02.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் அவ்வளாகத்தில் 6 நியாய விலைக் கடைகள், கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே இருந்தது. இதற்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.
அதன் பிறகு, புதிதாக தொடங்கப்படும் கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நண்பர்களாகதான் பார்க்கிறேன், மரியாதை அளிக்கிறேன்!” என பதிலளித்ததோடு;
“தி.மு.க தலைமையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.






