India

அதிகரிக்கும் உயிரிழப்புகள் : இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனாவில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் தாக்குதல் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஊஹான் நகரில் இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஊஹான், ஹூவாங்காங், இசோ உள்ளிட்ட 13 நகரங்களில் போக்குவரத்து சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1300க்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளதாகவும், சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினால் அவர்கள் மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் பரவும் ஆபத்து உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், கொரோனாவுக்கு வரும் அறிகுறிகள் போன்று பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வைரஸ் தொற்றுகளுக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுவும் தொடுதல் மூலம் சுலபமாக பரவும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: சீனாவை அச்சுறுத்தும் 'கொரனோ' வைரஸ்... தமிழக விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை!