Cinema

84 வயது.. மீண்டும் அரசியல் தொடர்பான படத்தில் HEROவாக களமிறங்கும் கவுண்டமணி: படத்தின் பெயர் என்ன தெரியுமா?

80's, 90's களங்களில் பிரபல நடிகராக இருந்தவர் கவுண்டமணி. பல படங்களில் காமெடியனாக நடித்த இவர், ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். இவரும் நடிகர் செந்திலும் திரையில் நடிக்கும் காமெடி காட்சிகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம். இந்த சூழலில் இவர் சில வருடங்களாக திரைத்துறையில் இல்லாமல் இருந்தார்.

49-O

இதையடுத்து கடந்த 2015-ல் '49-O' படம் என்ற படம் இவரது நடிப்பில் வெளியானது. 'நோட்டா' வை வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', 'வாய்மை' ஆகிய படங்கள் 2016-ம் ஆண்டு வெளியானது. அதுவும் இவர் நினைத்த அளவு கூட வெளியில் பேசப்படவில்லை. இதனால் அவர் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார். அதன்படி இவர் நடிக்கும் படத்துக்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது. மீண்டும் அரசியல் சார்ந்த படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இவருடன் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, யோகி பாபு, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை, நாகேஷின் பேரன், சிங்கமுத்துவின் மகன் என ஒரு காமெடி திரைபட்டாளமே நடிக்கிறது.

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கும் இந்த படத்தை, ஷஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் ஏற்கனவே கடந்த 1999-ல் பாண்டியராஜன், மனோரமா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற படத்தையும், 2005-ல் சிம்ரன், மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'கிச்சா வயசு 16' படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சாய் ராஜகோபால் எழுதி, அவரது இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்கவுள்ளார். இது குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறுகையில், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமின்றி இதில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய வகையில் இந்த படம் முழு நீள காமெடி படமாக இருக்கும். இந்த படம் பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்" என்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது கவுண்டமணிக்கு 84 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுதந்திர போராட்ட வீரர் ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ட்ரைலர் & ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர்