Cinema
செக் மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்.. நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி என்ன ?
தமிழில் பிரபல நடிகராக இருப்பவர் விமல். கில்லி, குருவி, கிரீடம் உள்ளிட்ட சில படங்களில் சைடு ரோலில் நடித்த இவர், கடந்த 2009-ல் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகில் பெரிதாக தெரியவந்தார். தொடர்ந்து 2010-ல் வெளியான 'களவாணி' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். அந்த படம் இவருக்கு பெரிய பெயர் பெற்றுக்கொடுக்க தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து இவர் எத்தன், தூங்கா நகரம், தேசிங்கு ராஜா கலகலப்பு, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் என அடுக்கடுக்கான படங்களில் நடித்து வந்த இவரது சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் அண்மையில் 'விலங்கு' என்ற சீரிஸ் வெளியானது. கிரைம் த்ரில்லராக அமைந்திருக்கும் இந்த சீரிஸ் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விலங்கு 2 விரைவில் தொடங்கப்படும் என அண்மையில் விமல் பேட்டி அளித்திருந்தார்.
இதனிடையே இவரது நடிப்பில் 2018-ல் வெளியான 'மன்னர் வகையறா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.இவரது இந்த படத்தின் மூலம்தான் பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். ஆனால் படத்தின் தொகையை அவர் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
மேலும் படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. எனவே அவருக்கு கோபி நெருக்கடி கொடுக்கவே செக் ஒன்றை வழங்கியுள்ளார் விமல். அந்த செக்கை எடுத்து வங்கிக்கு சென்றபோது, அந்த கணக்கில் பணம் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து நடிகர் விமல் ரூ.4.5 கோடி செக் மோசடி செய்ததாக கோபி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பினர் முன்வரவில்லை. எனவே முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து, வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார். ஆனால் திடீரென முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட விமலுக்கு ரூபாய் 300 அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
படங்கள் ஒரு புறம் இருக்க, அவ்வப்போது அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கும் விமல், கடந்த 2020-ல் லாக்டவுன் சமயத்தில் கூட கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதிக்கு அனுமதியின்றி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சினிமா இயக்குநர்கள் சென்று மீன் பிடித்து உள்ளனர். இதனையடுத்து அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்த இருவருக்கும் வனத்துறையினர் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பித்தக்கது.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!