Cinema

‘90ஸ் கிட்ஸ்களே இவரு யாருனு தெரியுதா ?..’ - அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் கோவை குணா காலமானார் !

தனியார் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான ஸ்டாண்ட் அப் காமெடி ஷோதான் 'அசத்தப்போவது யாரு?'. நடிகர் சிட்டி பாபு, மதன் பாபு ஜட்ஜாக இருந்து வந்த ஷோவில் கோவையை சேர்ந்த குணாவும் பங்கேற்றார். தனது அசத்திய திறைமைகளால் ரசிகர்களை கவர்ந்த இவர், காமெடியில் மட்டுமின்றி, மிமிக்கிரி செய்வதிலும் வல்லவராக இருந்தார்.

சிவாஜி, ரஜினி, கமல், கவுண்டமணி என நடிகர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவைகளின் குரல்களை வைத்தும் காமெடி செய்து வந்தார். குறிப்பாக ஸ்டாண்ட் அப் காமெடி பிரபலமான மதுரை முத்துவுடன் இவர் செய்த ஷோக்கள் ஏராளம். குறிப்பாக 90'ஸ் கிட்ஸை வெகுவாக கவர்ந்த இவர், தனது நகைச்சுவை உணர்வு மூலம் சோகத்தில் இருப்பவரை கூட சிரிக்க வைத்து விடுவார்.

கோவையை சேர்ந்த இவர் பல கனவுகளோடு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அசந்துபோவது யாரு-வை தொடர்ந்து மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோவான 'கலக்கப்போவது யாரு?'-விலும் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்மூலம் மேலும் ரசிகர்களை கவர்ந்த இவர், இந்த ஷோவின் முதல் சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். இதையடுத்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், அண்மைக்காலமாக உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரபல பாடகர் வாணி ஜெயராம், கடந்த மாதம் அவரது வீட்டில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். அதோடு பிரபல இயக்குநர் விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். மேலும் நடிகர் மயில்சாமியும் கடந்த மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த சூழலில் இந்த மாதம் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் கோவை குணா உடல் நலக்குறைவால் காலமானது தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!