All Programs

வறுமையை ஒழித்து விட்டாராம் மோடி: நிதி ஆயோக் விடும் புதுக்கதை!

அடுத்தடுத்து முன்னெடுக்கப்படும் நாடகங்கள்; பொய் பரப்பல்களுக்கு எதிரான காலம் வந்துவிட்டதை உணர மறுக்கும் பாஜக

வறுமையை ஒழித்து விட்டாராம் மோடி: நிதி ஆயோக் விடும் புதுக்கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆதாரமாக நிதி ஆயோக் குழுவின் அறிக்கையை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த சுமார் 25 கோடி பேர், மீட்கப்பட்டுள்ளனராம். இந்த மீட்சியும் அதிகப்படியாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்துள்ளதாம்.

இதில் வியப்பு என்னவெனில், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் உலக நாடுகளின் தரவரிசைகளில் ஒன்றான உலக பசி குறியீடு வரிசை வேறு கதையை சொல்கிறது என்பதுதான். 125 நாடுகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதாவது அந்தளவுக்கு பசிக் கொடுமை இந்தியாவில் நிலவுகிறது.

வறுமையை ஒழித்து விட்டாராம் மோடி: நிதி ஆயோக் விடும் புதுக்கதை!

கடைசிக்கும் கொஞ்சம் முன்னால் உலகப் பசி பட்டியலில் இருக்கும் இந்தியாவில் 25 கோடி பேர் எப்படி வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருக்க முடியும்?

கண்டிப்பாக முடியாது.

25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக மோடி சொல்லும் கருத்தை பற்றி பல பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் வைத்திருக்கின்றனர். அவற்றில் முதலாவது, நிதி ஆயோக்கின் அறிக்கை சுட்டிக் காட்டும் Multidimensional Poverty in India எனப்படும் MPI தரவு. இந்த தரவை கணக்கிடும் முறை என்ன தெரியுமா?

ஒன்றிய அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் எத்தனை பேரை சென்றடைய முடிகிறது போன்ற தரவுகளை கொண்டுதான் பன்முகத்தன்மையிலான வறுமை எனப்படும் இந்த MPI தரவு கணிக்கப்படுகிறது. இந்த தரவை மட்டும் கொண்டு வறுமையை கணக்கிட முடியாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

நிதி ஆயோக்கின் அறிக்கை இன்னொரு விஷயத்தையும் முன் வைக்கிறது. அதாவது 2030ம் ஆண்டுக்குள் இந்த ’பன்முகத்தன்மையிலான வறுமை’யை பாதியாக்கி தன்னிறைவு வளர்ச்சி இலக்கை இந்தியா எட்டி விடும் என்கிறது. இந்த ‘பன்முகத்தன்மையிலான வறுமை’தான் உள்ளபடியே உண்மையான வறுமை என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். இதை குறைத்து தன்னிறைவு வளர்ச்சியை உண்மையிலேயே எட்டிவிட முடியுமா?

தன்னிறைவு வளர்ச்சி என்பது அரசின் உதவியின்றி தன்னளவில் உழைத்து வளருவது. இந்திய மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உணவை உத்தரவாதப்படுத்த மானிய விலையில் அரசாங்கம் உணவை வழங்கி வருகிறது. இதன் அர்த்தம், மானிய விலையில் வழங்கினால்தான் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையினரால் உணவே உண்ண முடியும் என்கிற நிலை இருப்பதே.

அரசாங்கத்தின் உதவியின்றி, இந்திய பெரும்பான்மையால் உணவு கூட பெற முடியாதபோது அவர்கள் எப்படி அரசாங்கத்தின் உதவியின்றி தன்னிறைவு பெற்றுக் கொள்ள முடியும்? முடியவில்லை எனில், வறுமையை பாதியளவுக்கு எப்படி குறைக்க முடியும்? வேண்டுமானால் வறுமையின் உண்மையை எடுத்துக் காட்டாத ஒரு தரவை வைத்துக் கொண்டு கதை விடலாம், அவ்வளவுதான்.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அடிப்படையில் வறுமை என்பது ஒருவர் செலவு செய்யும் வலிமையை வைத்தே கணக்கிடப்படும். கடந்த காலங்களில் இதைத்தான் வறுமைக் கோடு எனக் குறிப்பிடுவார்கள். 2004-05ம் ஆண்டு நிலவரப்படி கிராமத்தை சேர்ந்த ஒருவர் மாதத்தில் 447 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்தால் அவர் வறுமையில் இருக்கிறாரென பொருள். நகரத்தை சேர்ந்தவர் 578 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்தால் வறியவர் என பொருள்.

இது போல மீண்டும் வறுமையின் நிலை இந்தியாவில் கணக்கிடப்பட்டது கடந்த 2011-12ம் ஆண்டில்தான். அதன்படி இந்திய மக்கள்தொகையின் 21.9 சதவிகிதம் பேர் வறுமையில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டில் பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் - அதாவது 2017ம் ஆண்டில் - வறுமைக்கான கணக்கீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. குடும்பங்களின் செலவின கணக்கெடுப்பும் எடுக்கப்படவில்லை. இவை இரண்டும் இயல்பாக விடுபட்டவையல்ல.

2016ம் ஆண்டில்தான் பணமதிப்புநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, பெரும் பொருளாதார அநீதி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது. ஜிஎஸ்டி, எரிவாயு விலை என அடுத்தடுத்து பொருளாதார அநீதிகள் இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்டன. 2017ம் ஆண்டில் Business Standard எடுத்த கணக்கெடுப்பில், கடந்த 40 வருடங்களில் இல்லாதளவுக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணமதிப்புநீக்கம் தொடங்கி அடுத்தடுத்து தொடர்ந்து நீடித்த பொருளாதார அநீதிகளின் தாக்கம் இன்றளவும் மக்களிடையே நீடிக்கிறது. அந்த உண்மையின் சான்றாகவே உலகப் பசி தரவரிசை பட்டியல் இருக்கிறது.

வறுமையை ஒழித்து விட்டாராம் மோடி: நிதி ஆயோக் விடும் புதுக்கதை!

இத்தகைய பின்னணியில் தேசிய ஆய்வறிக்கைகளின்படி, கடன் மற்றும் வேலைவாய்ப்பின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பல்லாயிரம் கோடி கடன் பெற்ற ஒருவர் கூட மகிழ்ச்சியற்று இருப்பதாக எந்த விவரங்களும் வெளிவரவில்லை. மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், பொய்களை எந்தத் தயக்கமுமின்றி வழக்கம்போல் பொழிகிறார் மோடி.

உண்ண உணவின்றி குடிமக்கள் வாடுகின்றனர் என சொன்னதற்கு, “உணவு இல்லையெனில் அவர்களை கேக் சாப்பிட சொல்லுங்கள்,” என எகத்தாளம் பேசினாளாம் பிரான்ஸ் நாட்டின் ராணி. விளைவாக வெடித்த பிரஞ்சு புரட்சிக்கு பிறகு வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு ராணி தூக்கியெறியப்பட்டாள். வறுமை ஒழிந்து வருவதாக ஏழ்மையில் வாடும் இந்திய மக்களை எள்ளி நகையாடும் வகையில் மோடி தற்போது பேசியிருக்கிறார்.

வரலாறும் குப்பைத்தொட்டியும் ஆவலோடு காத்திருக்கின்றன.

banner

Related Stories

Related Stories