வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பலரும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் அல்ஜீரியா வரை உணரப்பட்டுள்ளது.