உலகம்

பனிக்கட்டி இழுத்து வந்து மக்களின் தாகத்தை தணிக்க புதிய திட்டம் - கேப் டவுனில் நடக்கும் சம்பவம் உண்மைதானா?

பனிக்கட்டி ஒன்றை கட்டி இழுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அருகே கொண்டு வந்து கேப் டவுன் மக்களின் தாகத்தை தணிக்கலாம் என்றார்.

பனிக்கட்டி இழுத்து வந்து மக்களின் தாகத்தை தணிக்க புதிய திட்டம் - கேப் டவுனில் நடக்கும் சம்பவம் உண்மைதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நிக்கோலஸ் ஸ்லோன் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தை சேர்ந்தவர். கடல் போக்குவரத்து சார்ந்த பேரிடர் குழுவில் பணியாற்றி பல வருட அனுபவம் பெற்றவர். கேப் டவுன் நகரம் 2018ம் ஆண்டில் நெருக்கடி நிலையை அறிவித்திருந்தது. மூன்று வருடங்கள் தொடர்ந்த பஞ்சம் மற்றும் பொய்த்த மழைக்காலங்களால் ஆறுகள் வறண்டு, குடிநீருக்கு திண்டாட்டம் ஏற்பட்டிருந்தது.

40 லட்சம் பேர் வாழும் நகரத்தில், மக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறார்கள். Zero Day என சொல்லப்படும் ‘குடிநீர் இல்லாமல் போகும் நாள்’ நெருங்குவதாக அரசு அறிவித்தது. முடிந்த வரை அந்த நாளை தள்ளிப்போட மிகக் குறைவாக குடிநீரை மக்களுக்கு விநியோகிக்க தொடங்கியது அரசு. ஒரு குடும்பத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. 50 லிட்டர் தண்ணீரில்தான் குடிநீர், சமையல், குளியல், துணி துவைத்தல் எல்லாம்.

பனிக்கட்டி இழுத்து வந்து மக்களின் தாகத்தை தணிக்க புதிய திட்டம் - கேப் டவுனில் நடக்கும் சம்பவம் உண்மைதானா?

கேப் டவுனில் வளர்ந்து வரும் தண்ணீர் பிரச்சினைக்கு ஸ்லோன் ஒரு தீர்வை முன்வைத்தார். அண்டார்டிகாவில் இருந்து உடைந்து மிதந்து கொண்டிருக்கும் பனிக்கட்டி ஒன்றை கட்டி இழுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அருகே கொண்டு வந்து கேப் டவுன் மக்களின் தாகத்தை தணிக்கலாம் என்றார்.

கேட்கும்போதே பைத்தியக்காரத்தனமாக தோன்றும் இத்திட்டம் உதித்திருப்பது கடல் சார்ந்த பேரிடர் தீர்வுகளின் வல்லுனரான ஸ்லோனுக்கு என்பதே திட்டத்தின் மீது ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட காரணமாகிறது. இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகளில் தப்பித்தவர். தீப்பிடித்து எரியும் கப்பல்களிலும் உடையும் கப்பல்களுக்குள்ளும் பல்லாயிர மணி நேரங்களை செலவிட்டவர்.

கப்பல்களில் இருந்து ரசாயனங்கள் வெளிப்படும் நேரங்களில் அழைக்கப்பட்டு, சேதங்கள் ஏற்படாமல் காப்பாற்றியவர். நடு இரவுகளில் அழைப்புகள் வந்து உலகின் எந்த மூலைக்கும் உடனே கிளம்பி சென்று பேரிடர் சூழல்களை கையாண்டவர். இத்தகைய ஒருவர் சொல்லும் திட்டம் எத்தனை கதைக்குதவாத காரியமாக தெரிந்தாலும், செய்து காட்டி விடுவார் என்றவொரு குருட்டு நம்பிக்கை தோன்றுவது இயல்புதானே!

ஆகவே பனிக்கட்டி இழுத்து வரும் திட்டம் உண்மையாகவே பரிசீலிக்கப்பட்டது.

‘பனிக்கட்டி இழுத்து வருவதற்கு ஆகும் செலவு ஈடுகட்டப்பட வேண்டுமெனில், பனிக்கட்டியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஸ்லோன். அதாவது 3281 அடி நீளமும், 500 மீட்டர் அகலமும் 250 மீட்டர் ஆழமும் இருக்க வேண்டும். சுமாராக 12.5 கோடி டன் எடை இருக்க வேண்டும். அப்படியொரு பனிக்கட்டி கிடைத்தால், கேப் டவுனுக்கு ஓராண்டில் தேவைப்படும் தண்ணீர் கிடைத்துவிடும் என்றார் ஸ்லோன்.

பனிக்கட்டி இழுத்து வந்து மக்களின் தாகத்தை தணிக்க புதிய திட்டம் - கேப் டவுனில் நடக்கும் சம்பவம் உண்மைதானா?

பனிக்கட்டி இழுத்து வரும் திட்டத்துக்கு Southern Ice Project என பெயர் சூட்டினார் ஸ்லோன். பல பொறியியலாளர்களையும், கடல் ஆராய்ச்சியாளர்களையும் இத்திட்டத்துக்கென பணியமர்த்தினார். பனிக்கட்டி இழுத்து வருவதற்கான செலவு 20 கோடி டாலர்கள் ஆகலாம் என கணக்கிடப்பட்டது. திட்டத்துக்கென இரண்டு தென்னாப்பிரிக்க வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

இப்படியொரு திட்டம் சாத்தியமா என கேட்பதற்கான சகல வாய்ப்புகளும் இயல்பான மனிதனின் புத்திக்கு இருக்கிறது. ஆனாலும் சாத்தியம் என்றே சொல்கிறார்கள் அற்புதமான புத்தி வாய்த்த அறிஞர்கள். இது போன்ற முயற்சிகள் வரலாற்றில் பல தருணங்களில் நடைபெற்றிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்துக்கும் அதிகமான அண்டார்டிகா பனிக்கட்டிகள் உருகி கடலில் கலக்கின்றன. ஒவ்வொரு பனிக்கட்டியும் ஜமாய்க்கா தீவு அளவுக்கு பரப்பளவு கொண்டவை. வீணாக கடலில் கலக்கும் நல்ல தண்ணீர் கொண்ட பனிக்கட்டிகளை ஏன் வீணாக்க வேண்டுமென கேள்வி கேட்கிறார்கள் ஆய்வாளர்கள். நல்ல தண்ணீர் வீணாவதை பற்றி உண்மையிலேயே தீவிரமாக கவலைப்படும் இத்தகைய அறிவியலாலர்களால்தான் இன்னும் அண்டார்டிகா, மொத்தமாக உருகாமல் இருக்கிறதென சொல்ல வேண்டும்.

2010ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ‘பனிக்கட்டி இழுத்து வரும்’ ஒரு திட்டத்தை ஆலோசிக்க தொடங்கியிருக்கிறது. ஜெர்மனியில் இருக்கும் Polewater என்ற நிறுவனம், கடந்த ஆறு வருடங்களில் 28 லட்சம் டாலர்கள் செலவில் பல வல்லுனர்களை பணிக்கமர்த்தி பனிக்கட்டி இழுத்து வரும் ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறது.

பனிக்கட்டி இழுத்து வந்து மக்களின் தாகத்தை தணிக்க புதிய திட்டம் - கேப் டவுனில் நடக்கும் சம்பவம் உண்மைதானா?

செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன் ஸ்லோனின் குழு அண்டார்டிகா பகுதியில் ஒரு பனிக்கட்டியை குறித்திருக்கிறார்கள். இனி அந்த பனிக்கட்டியை ராடாரின் துணையுடன் ஆய்வு செய்யவிருக்கிறார்கள். ஸ்லோனின் குழு எதிர்பார்ப்பதை போல் பனிக்கட்டி இருக்கும் பட்சத்தில் இரண்டு இழுவை படகுகளை கொண்டு, பனிக்கட்டியை மிகப்பெரிய வலைக்கயிறால் கட்டி இழுத்து வந்து விடுவார்கள். இழுத்து வரும்போது கயிறு அறுந்து விடாமல் இருக்க புதுவகை உலோகத்தால் செய்யப்பட்ட கயிறை பயன்படுத்த இருக்கிறார்கள். கயிறின் விலை மட்டும் இரண்டரை கோடி டாலர். சூப்பர் டேங்கர் என அழைக்கப்படும் நீளமான சரக்கு கப்பல்களை கொண்டு பனிக்கட்டிகள் இழுக்கப்படும். கடலில் இருக்கும் நீரோட்டத்துக்கு பொருந்த பனிக்கட்டி இழுத்து வரப்பட வேண்டும்.

எல்லாமும் சரியாக நடந்து பனிக்கட்டி கொண்டு வரப்பட்டு விட்டால், குழாய்கள் பொறுத்தப்பட்டு நகராட்சி நீர்த்தேக்கங்களுக்கு பனிக்குழைவு கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டுவிடும். ஒரு வருடம் வரை பனிக்கட்டி தாங்கும் என்கிறார் ஸ்லோன்.

banner

Related Stories

Related Stories