கேரள மாநிலம் கோட்டயம் அடுத்துள்ள சிங்கவனம் என்ற பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் சாக்கோ. இவர் கத்தார் நாட்டில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வரும் இவருக்கும் சௌமியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது கத்தார் நாட்டில் வசித்து வரும் இவர், தனது குழந்தைகளை அங்குள்ள பள்ளிகளில் படிக்க வைத்து வருகிறார். அதில் இவரது 4 வயதுடைய 2-வது மகள் அங்குள்ள கிண்டர் கார்டன் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளன்று தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாட மகிழ்ச்சியுடன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற குழந்தை அயர்ந்து பள்ளி பேருந்திலேயே உறங்கியுள்ளது.
இதை சற்றும் கவனிக்காத பள்ளி பேருந்து ஓட்டுநர் ஜன்னல் உட்பட வாகனத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டார். பகல் முழுவதும் பேருந்தின் உள்ளேயே இருந்து சிறுமிக்கு வெயிலின் தாக்கத்தின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் மூச்சு விட முடியாமல் பள்ளி பேரூந்துக்குள்ளேயே மயக்க நிலைக்கு சென்றுள்ளது.
இதையடுத்து எதேர்ச்சியாக சுமார் 1 மணியளவில் பள்ளி பேருந்திற்குள் வந்த ஓட்டுநர் சிறுமி மயக்க நிலையில் இருந்ததை கண்டார். இதைக்கண்டதும் பதறியடித்த ஓட்டுநர் உடனே சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட கத்தார் அரசு, பள்ளியின் மேல் தவறு இருப்பதாக கூறி பள்ளி மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் சடலத்தை, அபிலாஷ் வீட்டின் முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கத்தார் மற்றும் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.