உலகம்

பூமியை தாக்க வரும் சிறுகோள்களை அழிக்க சீனா திட்டம்.. மீண்டும் தட்டம்மை நோய் - 132 பேர்பலி ! #5IN1_WORLD

காங்கோ குடியரசு நாட்டில் தட்டம்மை நோய் பாதிப்புக்கு இதுவரை மொத்தம் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பூமியை தாக்க வரும் சிறுகோள்களை அழிக்க சீனா திட்டம்.. மீண்டும் தட்டம்மை நோய் - 132 பேர்பலி ! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1) இத்தாலிய குழந்தைகளின் பெயருக்கு பின்னால் தந்தை, தாய் பெயர்: கோர்ட்டு அதிரடி உத்தரவு

இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும். இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

2) காங்கோவில் தட்டம்மை நோய்க்கு 132 பேர் உயிரிழப்பு!

காங்கோ குடியரசு நாட்டில் தட்டம்மை நோய் பாதிப்புக்கு இதுவரை மொத்தம் 132 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் தட்டம்மை நோய் பரவி வருகிறது.

இதுபற்றி அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறும்போது, நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்க கூடிய பாய்ண்ட்-நாய்ர் இந்த தொற்று நோய்க்கான மையமாக உள்ளது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை இந்த பகுதியில் மொத்தம் 5,488 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட இடையூறுகளை தொடர்ந்து தட்டம்மைக்கான தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. இதனை சுட்டி காட்டி கடந்த ஏப்ரலில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தட்டம்மை நோய் தொற்று ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

3) பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை தாக்கி அழிக்க சீனா திட்டம்!

புவியை நோக்கி வரும் சிறுகோள்களை கண்டுபிடித்துத் தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாகச் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. பூமியையும் மனித இனத்தையும் காப்பதில் இந்த அமைப்பு முதன்மையானதாக இருக்கும் என, சீன விண்வெளி அமைப்பின் துணைத் தலைவர் ஊ யான்குவா தெரிவித்தார்.

2025ம் ஆண்டில் இந்த அமைப்பு நிறுவப்படும் என்று மேலும் அறிவித்தார். சிறு கோள்களின் வேகம், தொலைவு அவை பூமியை நெருங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிந்து அதைத் தாக்குவதற்கான வாய்ப்பு, ஒத்திகை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மென்பொருளையும் இது கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை தாக்க வரும் சிறுகோள்களை அழிக்க சீனா திட்டம்.. மீண்டும் தட்டம்மை நோய் - 132 பேர்பலி ! #5IN1_WORLD

4) ஐ.நா. தலைவர் வருகையின்போது ஏவுகணை தாக்குதல்; அதிர்ச்சி அளித்த ரஷ்யா!

ஐ.நா. தலைவர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதியில் ஐ.நா. தலைவர் வருகையையொட்டி, ரஷ்யாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன. இதனை தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது.

நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஐ.நா. மற்றும் அந்த அமைப்பினை ரஷ்ய தலைமை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே அதிக விளக்கம் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

5) ஆப்கானிஸ்தானில் முடி வைக்க, வெட்ட கடும் கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கத்திய பாணியில் மாணவர்கள் முடிவெட்ட தலிபான்கள் தடை விதித்து உள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஹெராத் மாகாணத்தில் துணி விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்படும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என அவர்கள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் நாடகங்கள் மற்றும் சோப் விளம்பரங்களில் பெண்கள் நடிக்கும் காட்சிகளை நிறுத்தும்படியும் தலிபான்கள் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories