உலகம்

உளவுத்துறை அதிகாரிகள் குறித்து துப்பு கொடுத்தால் 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு! #5in1_World

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் குறித்து துப்பு கொடுத்தால் 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு! #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த துப்புக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் பரிசு

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிறநாட்டு அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபரின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) ரூபிளில் பணம் செலுத்தவில்லை - ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தம்

ரூபிளில் பணம் செலுத்தாததால் 2 ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா நிறுத்தியுள்ளது. போலாந்து, பல்கேரியாவுக்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய், எரிவாயுவை ரஷியா இன்று அதிரடியாக நிறுத்தியுள்ளது. ரஷியாவின் அரசு நிறுவனமான கேஸ்புரொம் போலாந்தின் அரசு நிறுவனமான பிஜிஎன்(PGN) இங்(ing) மற்றும் பல்கேரியாவின் அரசு நிறுவனமான பல்கர் கேஸ் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த எரிவாயுவை அதிரடியாக நிறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரஷ்ய ரூபிளில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனம் கேஸ்புரொம் அறிவித்துள்ளது.

3) வடகொரியாவின் அணு ஆயுத திறன் வலுப்படுத்தப்படும் : கிம் ஜாங் சூளுரை

வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினத்தில் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட வடகொரியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் ஏராளமான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங், “நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். நமது அணுசக்தி படைகளின் அடிப்படை நோக்கம் போரைத் தடுப்பதுதான், ஆனால் நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால், நமது அணுசக்திப் படைகளை போரைத் தடுக்கும் ஒற்றைப் பணியோடு நிறுத்திவிட முடியாது. எனவே நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உளவுத்துறை அதிகாரிகள் குறித்து துப்பு கொடுத்தால் 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு! #5in1_World

4) சீனாவில் ‘எச்3 என்8’ பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது

பறவை காய்ச்சலின் ‘H3 N8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5) கருத்து சுதந்திரம் என்பது - எலான் மஸ்க் ட்வீட்

ட்விட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். கருத்து சுதந்திரம் என நான் குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் நான் எதிரானவன். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும்.” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories