உலகம்

”எனது இந்த இந்திய பயணம்...” - 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் கூறியது என்ன தெரியுமா?

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 54-வது நாளாக நீடித்து வருகிறது.

”எனது இந்த இந்திய பயணம்...” - 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் கூறியது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனை தென்கொரியாவின் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்துள்ளது.

2.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். ஏப்ரல் 21ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அவர், அங்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்கிறார். இதையடுத்து, 22-ம் தேதி புதுடெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில், இந்திய பயணம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மிகவும் மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது. எனது இந்திய பயணம் இந்தியா, பிரிட்டன் இடையே இரு நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை வழங்கும். வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முதல் பாதுகாப்பு வரையிலான அம்சங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.

3. அமெரிக்காவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடைபெற்றதாக தெரியவில்லை என்றும், இதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதாக மாகாண தகவல் இயக்குனர் நஜிபுல்லா ஹசன் அப்தால் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் ராணுவ ஹெலிகாப்டர்கள் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமங்களை குறி வைத்து குண்டு வீசியதாகவும், பொதுமக்கள் வீடுகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் இதில் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்லாமாபாத் நிர்வாகத்திற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசு கடுமையாக கண்டிக்கிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.மீண்டும் இது போன்ற தாக்குதல்களை தடுக்க நாங்கள் பதிலடி கொடுப்போம் என்றும், எங்கள் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 54-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ராணுவ வீரரகளை சந்தித்த அதிபர் ஜெலன்ஸ்கி அவர்களுக்கு பதக்கங்களை பரிசாக அளித்து அவர்களை பாராட்டினார்.இதனைத் தொடர்ந்து வீரர்களிடையே பேசிய அவர், நமது நாட்டையும், இறையாண்மையும் பாதுகாக்க போர்புரிந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தான் நன்றி கூறிக் கொள்வதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories