
முரசொலி தலையங்கம் (05-08-2026)
காவிரிக்காக பொங்கிய தி.மு.க.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்றுசங்கே முழங்கு - என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். காவிரி உரிமை பறிக்கப்படும் நேரமான இன்று தனது வீறுகொண்ட ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய உரிமை கொண்ட நீரைத் தர மறுக்கிறது கர்நாடகம். கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 0.698 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கி இருக்கிறது கர்நாடகம். கடந்த ஐம்பது ஆண்டு களில் மிகக் குறைந்த நீரை கடந்த மாதம்தான் பெற்றுள்ளோம். சட்டப்படி பார்த்தால் நமக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கி இருக்க வேண்டும். தண்ணீர் வழங்கத் தேவையில்லை என்ற துணிச்சல் கர்நாடகாவுக்கு எதனால் வந்தது? இங்குள்ள அரசு மீது அவர்களுக்கு மரியாதையோ பயமோ இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. 'விஜய்க்கு அரசியல் தெரியாது, அனுபவம் இல்லை' என்று தனது பேட்டிகளில் தொடந்து சொல்லி வருகிறவர் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.
‘எங்களுக்கே தண்ணீர் இல்லை' என்று ஒப்பாரி வைக்கிறது கர்நாடகம். காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி தண்ணீரைத் திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும் அதனைச் செயல்படுத்தாமல் இருக்கிறது கர்நாடகம். இதை விட மோசமாக மேகதாது அணையைக்கட்டியே தீருவோம் என்பதிலும் கர்நாடகம் பிடிவாதமாக இருக்கிறது.
இதனைத் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத அரசாக முதலமைச்சர்விஜய் அரசு இருக்கிறது. கர்நாடகாவில் மழை பெய்வதால் உபரி நீர் தமிழ்நாடுவருகிறது. உடனே, ‘பார்த்தீர்களா, விஜய் தண்ணீர் கொண்டு வந்துவிட்டார்' என்று அளக்கிறார்கள். உபரி நீருக்கும் நமக்குத் தர வேண்டிய உரிமை நீருக்கும் வித்தியாசம் காணத் தெரியாத தற்குறிகளுக்கு என்ன பதில் சொல்வது?
கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் அரசு. இங்கே முதலமைச்சர் விஜய்யும் காங்கிரஸ் தயவில்தான் அந்த நாற்காலியில் இருக்கிறார். இரண்டு தரப்பையும் காங்கிரஸ் தலைமை உட்கார வைத்து பேசலாமே என்று கேட்டால், ‘ராகுல் தமிழ்நாட்டுக்கு வரும் போது மழையைக் கொண்டு வந்துவிட்டாரே' என்கிறார் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர். ராகுல் காந்தியை மூன்று மாதத்துக்கு தமிழ்நாட்டிலேயே இருக்க வைக்கிறீர்களா? இந்த மாதிரி எல்லாம் 'கம்பி கட்டும்' கதைகளைச் சொல்கிறார்கள். தீர்வுக்கு முயற்சிக்காமல் திருகல் பதில்களைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்துக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், உழவர் பெருமக்களும் த.வெ.க. அரசுக்கு சொல்லியும் அவர்கள் செய்ய- வில்லை. ‘அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை' என்று சொல்லி விட்டார்கள். கர்நாடகாவுக்கு போய் சீன் பண்ண நினைத்தார் விஜய். அதுவும் அனைவர் எதிர்ப்பால் செய்யமுடியவில்லை. இப்படி ஏதுவும் செய்யத் திராணியற்ற அரசாக விஜய் அரசு இருக்கிறது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய கடமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தார்கள். மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறிய த.வெ.க. அரசைக் கண்டித்தும், விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், த.வெ.க. அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் அவர்கள் அறிவித்தார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்கள்.
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சை மண்ணில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின், உழவர் பெருமக்களின் உணர்வை கர்நாடக அரசுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது. எங்கே திரும்பினாலும் பச்சைத் துண்- டுகளாகக் காட்சி அளித்தது. தி.மு.க. விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணித் தோழர்களுடன் கழக உடன்பிறப்பு களும் சாரை சாரையாகக் கலந்து கொண்டு தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் 'இது நமது மேடை' என்ற உணர்வோடு பங்கெடுத்தார்கள். அனைத்து விவசாய அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் முழங்கினார்கள்.
“விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜோக்கர் கூட்டமாக அமைச்சரவை இருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டம் வறண்டு காட்சி அளிக்கிறது. குறுவையைக் காப்பாற்ற த.வெ.க. அரசால் முடியவில்லை. டம்மி முதலமைச்சராக விஜய் இருக்கிறார். நிர்வாகத் திறனற்ற அரசாக த.வெ.க. அரசு இருக்கிறது”என்று கடுமையாகக் கண்டித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். இதுதான் ஒட்டுமொத்த உழவர்களின் உணர்வாக அமைந்துள்ளது.
“காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டாவிவசாயிகள் ஆதங்கம் பெருக்க போராடி வருகிறார்கள். அண்டை மாநிலத்தில்தனது திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
‘விஜய் நினைத்தார், காவிரியில் தண்ணீர் வருகிறது' என்று துணை நடிகைகளை வைத்து ரீல்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தொழில் முதலீடுகள் அதலபாதாளத்துக்கு போகிறதே. ஏன் விஜய் நினைக்கவில்லையா? வேறு நினைப்பில் இருக்கிறாரா? தமிழ்நாடு இன்னும் என்னென்ன கூத்துகளை எல்லாம் பார்க்கப் போகிறதோ? இன்னும் எவ்வளவு துன்பத்தைத்தான் அனுபவிக்கப் போகிறதோ?






