உலகம்

விமானங்களை போல பூமிக்கும் வருகிறது கறுப்பு பெட்டி - அது என்ன செய்யும்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதோ!

‘அதெப்படி அழியும்’ என பெட்ரோமாக்ஸ் லைட்டை அமுக்கி உடைக்கும் செந்திலைப் போல் காலநிலை மாற்றத்தை ஏற்காத பலர் இன்னும் இருக்கிறார்கள்.

விமானங்களை போல பூமிக்கும் வருகிறது கறுப்பு பெட்டி - அது என்ன செய்யும்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Artificial Intelligence என ஒரு ஆங்கிலத் திரைப்படம். இயந்திரச் சிறுவனை பற்றிய படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருந்தார். படத்தின் இறுதியில் கடலுக்குள் இயந்திரச் சிறுவன் விழுந்து விடுகிறான். காலம் உருண்டோடுகிறது. மனித குலம் அழிந்து விடுகிறது. வெகு காலத்துக்குப் பின், அந்நியக் கிரக ஜீவராசிகள் பூமிக்கு வருகின்றனர்.

பூமியில் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். உயிர் எங்கும் இல்லை. கடல் பனிமலையாகி அந்தப் பனிக்குள் இயந்திரச் சிறுவன் கண்டுபிடிக்கப்படுகிறான். இயந்திரத்துக்கு உயிர் இருக்க முடியுமா? தெரியவில்லை. ஆனால் இயந்திரம் என்பதால் இயந்திரச் சிறுவன் பழுதடைந்திருக்கும். நினைவு இருக்காது. அவனது மூளையில் பதிந்த தகவல்களைக் கொண்டு பூமியின் உயிர் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள அந்நிய ஜீவராசிகள் முயலுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சக்தியின்படி நனவற்ற இயந்திரச் சிறுவனின் தலையில் கை வைப்பார்கள். அவன் மூளையில் இருக்கும் தகவல்கள் அவர்களுக்கு பிம்பங்களாகத் தெரியும். ஒரு நிறைவேறாத ஆசையால் அவன் நனவிழந்ததை ஜீவராசிகள் கண்டுபிடிப்பார்கள். பிறகு அவனது பழுதை நீக்கி, நிறைவேறா ஆசையை தங்களின் சக்தியைக் கொண்டு ஜீவராசிகள் நிறைவேற்றி வைப்பதாக படம் முடியும்.

நம் மனங்களின் எண்ணவோட்டங்களை அறிய முடிந்தால் எப்படி இருக்கும்? இவ்வுலகமே அழிந்து என்றேனும் ஒருநாள் இங்கு வரும் ஜீவராசிகளுக்கு நாம் எப்படி அழிந்தோம் என கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும்?

அதற்கான முயற்சி ஒன்று ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

கறுப்புப் பெட்டி!

விமான விபத்துகளில் நாம் கறுப்புப் பெட்டி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஒரு விமானம் விபத்துக்குள்ளானால் அதில் இருக்கும் கறுப்புப் பெட்டி மட்டும் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. அந்த வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். கறுப்புப் பெட்டியின் வேலை பேச்சுகளை பதிவு செய்வது, விமானம் கிளம்பிய நேரம், ஏறிய உயரம், எரிபொருள் அளவு, காற்றழுத்த அளவு, பிற கருவிகளின் இயக்கம் முதலிய பல தகவல்களை பதிவு செய்வதாகும். விமானம் விபத்துக்குள்ளான பிறகு, இந்தக் கறுப்புப் பெட்டியைக் கொண்டு விமானம் விபத்துக்குள்ளான காரணத்தைக் கண்டுபிடித்துவிட முடியும்.

பூமிக்கு அப்படியொரு கறுப்புப் பெட்டி ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கடந்த பத்து வருடங்களில் காலநிலை உலகெங்கும் மிகப் பெரும் அளவில் மாற்றம் கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம், வறட்சி, வெயில், பசி, வறுமை என எல்லாமுமே அதீதமாக மாறிக் கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக உருகாத பனி உருகத் தொடங்கியிருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. வைரஸ்கள் புதிதாக கிளம்புகின்றன. விலங்கியல் நோய்கள் உருவாகின்றன. தொழிற்புரட்சி தொடங்கி நாம் பயன்படுத்தும் கார்பன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமும் உற்பத்தியும்தான் இத்தகைய காலநிலை மாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பதாக உலகளாவிய அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

காலநிலை மாற்றம் சரியாகவில்லை எனில் மனித குலம் அழியும் என்பதுதான் அறிவியலாளர்களின் கூற்று. ‘அதெப்படி அழியும்’ என பெட்ரோமாக்ஸ் லைட்டை அமுக்கி உடைக்கும் செந்திலைப் போல் காலநிலை மாற்றத்தை ஏற்காத பலர் இன்னும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ஐநாவில் கூடிய காலநிலை மாற்றத்துக்கான உலக நாட்டு அரசுகளின் மாநாட்டிலும் கார்பன் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான உத்தரவாதம் கிடைக்கவில்லை. மானுட அழிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது உலகம். இந்தப் பின்னணியில்தான் பூமிக்கான கறுப்புப் பெட்டியை உருவாக்கும் முயற்சியை ஆஸ்திரேலியா தொடங்கியிருக்கிறது.

விமானங்களை போல பூமிக்கும் வருகிறது கறுப்பு பெட்டி - அது என்ன செய்யும்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதோ!

ஆஸ்திரேலிய டாஸ்மேனியாவின் மேற்கு கடலோரத்தில் ஒரு மாநகரப் பேருந்தின் அளவில் உலோகப் பெட்டி அமைக்கப்படவிருக்கிறது. பேட்டரி சேமிப்பு, சூரிய மின்சாரத் தகடுகள் மற்றும் பிற கருவிகளுடன் உருவாக்கப்படும் இப்பெட்டி அடுத்த வருடத்தில் முழுமை பெறும். காலநிலை மாற்ற மாநாட்டின் உரைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. பூமியின் உயிர் வாழ் சூழல் பற்றிய நூற்றுக்கணக்கான அளவுகளும் தரவுகளும் உரையாடல்களும் இப்பெட்டியில் சேமிக்கப்படும் என சொல்லியிருக்கிறது பெட்டியை உருவாக்கும் நிறுவனம்.

காலநிலை பற்றிய உரையாடல்கள், கடந்த காலத் தரவுகள், நிலம் மற்றும் கடல் வெப்பநிலை மாற்றங்கள், கடலின் அமிலமயமாக்கல், வளிமண்டலத்தில் தேங்கும் பசுமைக் குடில் வாயுக்கள், மக்கள்தொகை, எரிவாயு நுகர்வு, ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, அரசுக் கொள்கை மாற்றங்கள் என பலவித தகவல்கள் இந்த பெட்டியில் சேமிக்கப்படவிருக்கின்றன. அடுத்தடுத்து வரும் சந்ததிகள் (!) நமது செயல்பாட்டை அறிந்து கொள்ள இந்தக் கருப்புப் பெட்டி உதவும் என்கின்றனர் நிறுவனத்தார். அடுத்த ஐம்பது வருடங்கள் வரையிலான தரவுகளை இப்பெட்டி சேமிக்க முடியும்.

எனவே நாம் இருக்கலாம் அல்லது அழிந்து போயிருக்கலாம். நம் சந்ததிக்கோ அல்லது மானுடமே அழிந்து என்றேனும் ஒருநாள் பூமிக்கு வரும் வேற்றுக் கிரக உயிரினங்களோ நாம் எந்தளவுக்கு பொறுப்பின்றி நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து காறித் துப்ப இந்தப் பெட்டி நிச்சயமாக உதவும்.

banner

Related Stories

Related Stories