முரசொலி தலையங்கம்

“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

“பிரதமர் பேச்சு கண்டனத்துக்குரியது!” என தலைப்பிட்டு திருச்சியில் மோடி பேசியதைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!

“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியான உரையை அவர் ஆற்றவில்லை. பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளர் பேசுவதைப் போல வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளித் தெளித்து பிரதமர் ஆற்றிய உரை கடும் கண்டனத்துக்குரியது.

அ.தி.மு.க.வைக் காவு வாங்கி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்ற போர்வையில் பா.ஜ.க.வை கொள்ளைப்புறம் வழியாகக் கொண்டு வர நினைக்கிறார் பிரதமர் மோடி அவருக்கு எப்போதும் நேரிய வழி தெரியாது. குறுக்கு வழியில் மாநில ஆட்சிகளைப் பிடிப்பதுதான் அவர்களது குணம். அதற்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமியின் கோழைத்தனத்தை முதலீடாக வைத்து வயிறு வளர்க்கப் பார்க்கிறது பா.ஜ.க. இந்த அரசியல் கயமையை மறைக்க தி.மு.க. ஆட்சி மீதான அவதூறுகளை அள்ளி வீசுகிறார் பிரதமர்.

நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி இருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளில் இந்திய நாட்டுக்குச் செய்த நன்மைகளை தனது பேச்சில் சொன்னாரா என்றால் இல்லை. தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திட்டங்களை வரிசைப்படுத்திச் சொன்னாரா என்றால் இல்லை. மாறாக தி.மு.க. அரசு குறித்த பொய்களையே தனது உரையில் அதிகமாகச் சேர்த்து வைத்து வாசித்திருக்கிறார் பிரதமர். இவை அனைத்தும் உண்மைகள் அல்ல, அப்பட்டமான அவதூறுகள்.

ஒரு வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்ற வில்லையாம். பிரதமர் கண்டுபிடித்து இருக்கிறார். தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை தெருவில் இறங்கிக் கேட்கவும். மக்கள் சொல்வார்கள்.

'தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்பதை வலியுறுத்த படாத பாடு படுகிறார் பிரதமர். எந்த அடிப்படையில் இதனைச் சொல்கிறார்? அதற்கு என்ன ஆதாரம்? பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகம் ஆகி இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளாரா? பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளாரா? ஏதுமில்லை.

“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பெண்களை அச்சமின்றி வாழ வைப்போம்' என்கிறார் பிரதமர். இதை மணிப்பூரில் போய் சொல்லத் தயாரா? இதை உ.பி.யில் போய் அவரால் சொல்ல முடியுமா? அந்த மாநிலப் பெண்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் படும் அவஸ்தைகளை!

ஒரு குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக தமிழ்நாடு இருக்கிறதாம். இப்படித்தான் பொறுப்பற்ற வகையில் பிரதமர் பேசுவதா? ஒரே ஒரு குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக இந்தியாவை மாற்றியதுதானே பிரதமர் மோடியின் சாதனை? ‘எங்கெல்லாம் மோடி செல்கிறாரோ அந்தந்த நாட்டுக்கு எல்லாம் அடுத்து அதானி செல்வார், தொழில் தொடங்குவார்' என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னாரே? இதுவரை பதில் சொன்னாரா பிரதமர்? இதை இன்னும் பகிரங்கமாக டெல்லி சட்டமன்றத்தில் அரவிந்த கெஜ்ரிவால் பேசிய பிறகுதானே அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது? கைது செய்து சிறையில் அடைக்கப்படும் சூழல் வந்தது? ஊழலைப் பற்றி யார் பேசுவது?

ஒரு குறைந்தபட்ச புள்ளிவிபரங்களை சரி பார்த்திருந்தால் கூட பிரதமர் பேச்சு இவ்வளவு அபத்தமாக இருந்திருக்காது. 'விவசாயிகளுக்கு தானிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்ற-வில்லை' என்று பேசி இருக்கிறார் பிரதமர். அதிகமான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கியதாக தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கி இருப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசு தான்.

டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.350 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள் உருவாக்-கப்பட்டுள்ளன.

2011-2021 ஆகிய பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன். ஆனால் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மற்றும் கட்டப்படவுள்ள கிடங்குகளின் கொள்ளளவையும் சேர்த்தால் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் ஆகும். இந்தப் புள்ளிவிபரத்தைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் அவதூறுப் பேச்சு பேசுகி-றார் பிரதமர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புல்லட் ரயில் வைத்துள்ளாராம். மோடி சொல்கிறார். மதுரைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. திருச்சிக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் முழுமையான நிதியைத் தரவில்லை. இந்த லட்சணத்தில் புல்லட் ரயில் விடப் போவதாகப் புளுகுகிறார் மோடி.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியவில்லை. வானம் ஏறி வைகுண்டம் காட்டுவாராம். அப்படித்தான் இருக்கிறது பிரதமர் மோடியின் 'கப்சா' உரைகள்!

banner

Related Stories

Related Stories