சினிமா

மனித உறவுகளை மாற்றும் தொழில்நுட்பம் : எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ‘Black Mirror’ பாருங்கள்!

திரைகளில் வெல்லும் யாரோ ஒருவரின் வெற்றியில் நம் வெற்றிகளை தீர்த்துக் கொள்கிறோம். சமூக ஊடகங்களிலும் அது உருவாக்கும் மனநிலைகளிலும் நம்மை தொடர்ந்து புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

மனித உறவுகளை மாற்றும் தொழில்நுட்பம் : எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ‘Black Mirror’ பாருங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Black Mirror என ஒரு தொடர். நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. உலகின் கொண்டாடப்பட்ட தொடர்களில் பிளாக் மிரரும் ஒன்று. 5 சீசன்கள், 22 எபிசோடுகள். எந்த எபிசோடும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்காது. ஆனால் எல்லா தொடர்களுக்கும் அடிநாதமாக இருப்பது ஒரு விஷயம்தான். தொழில்நுட்பம்!

அதிவேகமாக மாறி வரும் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எதிர்காலத்தில் என்னவாக மாற்றுகிறது என்பதே ஒவ்வொரு எபிசோடின் கதைக்களம். தொழில்நுட்பம் நம் வாழ்க்கைகளில் என்னவித மாற்றங்களை கொடுக்கின்றன என்பதை நாம் யோசிப்பதில்லை. வெகுவேகமாக தொழில்நுட்பம் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. விளைவாக மனித உறவுகளும் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது.

மனித உறவை தொழில்நுட்பம் எப்படி மாற்றும்?

உதாரணமாக பிளாக் மிரர் தொடரில் ஒரு அத்தியாயம். Fifteen Million Merits என்பதே அந்த எபிசோடின் தலைப்பு. எனக்குப் பிடித்த எபிசோட். பிங் மேட்சென் என்கிற கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நடக்கிறது.

எதிர்காலத்தில் ஒருநாள். பிங் மேட்சென் ஓர் அறையில் வாழ்கிறான். அவனைச் சுற்றி இருக்கும் சுவர்கள் அனைத்துமே ஒரு திரையாக இருக்கிறது. எல்லா திரைகளிலும் ஏதோவொரு நிகழ்ச்சி ஓடுகிறது. அவ்வப்போது நிகழ்ச்சிக்கு நடுவே விளம்பரம். நாம் இப்போது யூ ட்யூப் வீடியோ பார்க்கும்போது குறுக்கிடுகிறதே விளம்பரம், அதுபோல்!

அன்றாட வேலை ஒன்றுதான். நிறுத்தப்பட்ட சைக்கிளில் ஏறி அமர்ந்து ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். சைக்கிள் நகராது. ஆனால் ஓட்டுவதற்கு ஏற்ப மெரிட் கிடைக்கும். மெரிட் என்பதை நமக்கு உணவு கொண்டு வரும் ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு நாம் கொடுக்கும் ஸ்டார்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள். பிங் மேட்சென் மட்டுமல்ல, பலரும் அத்தகைய வாழ்க்கைக்குள்தான் இருக்கின்றனர்.

சைக்கிள்களை ஓட்டும்போது எதிரே ஒரு திரை இருக்கும். அங்கும் படம் ஓடும். வெவ்வேறு சேனல்கள் உண்டு. ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு கட்டணம். அந்தக் கட்டணத்தை மெரிட்களில் கொடுக்க வேண்டும்.

மனித உறவுகளை மாற்றும் தொழில்நுட்பம் : எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ‘Black Mirror’ பாருங்கள்!

மெரிட்களை கொண்டு பணக்கார வாழ்க்கை விரும்பி அனைவரும் சைக்கிள் ஓட்டுகிறார்கள். அந்த மெரிட்களை கொண்டு உணவுக்குக் கட்டணம் கொடுக்கிறார்கள். எல்லா சேவைகள் மற்றும் வசதிகளுக்கு மெரிட்கள்தான் பணம்.

அபி கான் என்கிற கதாபாத்திரம்தான் நாயகி. அவளுக்கு பாடும் திறமை உண்டு. திரையில் ஒளிபரப்பப்படும் ஒரு ‘திறமை தேர்வு’ நிகழ்ச்சியில் அவள் கலந்து கொள்ள பிங் ஊக்குவிக்கிறான். நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட அளவு மெரிக் கட்ட வேண்டும். அது அதிகமான அளவு. அபி கானுக்காக பிங்கும் சேர்ந்து சைக்கிள் ஓட்டுகிறான். தன்னுடைய மெரிட்களையும் கொடுத்து அவளை நிகழ்ச்சிக்கு அனுப்புகிறான் பிங். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் அபி கானுக்கு ஒரு பானம் கொடுக்கிறார்கள். அவளால் சரியாக பாட முடியவில்லை. நடுவர்களுக்கு அவளது பாடல் பிடிக்கவில்லை. எனினும் அவளை இழக்க விரும்பவில்லை. எனவே அவளை பாலியல் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள். அவளும் ஏற்கிறாள். பிங்குக்கு அதிர்ச்சி.

பிங் காதலித்த பெண் அவனது அறை கொண்டிருக்கும் எல்லா திரைகளிலும் பாலியல் நடிகையாக விளம்பரப்படுத்தப்படுகிறாள். அவனுக்கு ஒப்பவில்லை. அவள் திரையில் தோன்றும்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவன் பார்க்கவில்லை எனில் திரை அதிகமாக சத்தத்தை எழுப்பும். திரையை அவன் பார்க்கும் வரை சத்தம் தொடரும். வேறு வழியில்லாமல் அவன் பார்க்கிறான். எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட உறுதி பூணுகிறான்.

சைக்கிள் ஓட்டுவதில் வேகம் கூட்டுகிறான். அதிகமான மெரிட்களை நோக்கி ஓட்டுகிறான். ‘திறமை தேர்வு’ நிகழ்ச்சிக்கு நுழையுமளவு மெரிட்களை சேர்க்கிறான். நிகழ்ச்சியில் நுழைகிறான். ஒரு பாடலுக்கு நடனமாடுகிறான். திடுமென பாக்கெட்டில் வைத்திருக்கும் கண்ணாடித் துண்டை தன் கழுத்தில் வைத்துக் கொண்டு ‘பேச விடவில்லை எனில் அறுத்துக் கொள்வேன்’ எனக் கத்துகிறான். நடுவர்கள் அவனைப் பேச அனுமதிக்கின்றனர்.

மனித உறவுகளை மாற்றும் தொழில்நுட்பம் : எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ‘Black Mirror’ பாருங்கள்!

மொத்த மக்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் மெரிட்களாலான போலியான உலகத்தைப் பற்றிய உண்மைகளை கொட்டித் தீர்க்கிறான். மனித வாழ்வில் திணிக்கப்பட்டிருக்கும் செயற்கையை அம்பலப்படுத்திப் பேசுகிறான். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளக்கிடக்கைகள் அனைத்தையும் கொட்டி முடிக்கிறான்.

நடுவர்கள் சிலிர்த்து விடுகின்றனர். பிங்கின் பேச்சைக் கேட்டு கை தட்டுகின்றனர். நிகழ்ச்சியை தங்களின் திரைகளில் பார்க்கும் எல்லா மக்களும் கை தட்டுகின்றனர். நல்ல வரவேற்பு பெறும் அவனது பேச்சை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப ஒரு நடுவர் வாய்ப்பை வழங்குகிறார்.

எந்த செயற்கை உலகத்தை எதிர்த்தானோ அதே செயற்கை உலகின் ஓர் அங்கமாக மாற்றப்படுகிறான் பிங். அத்தியாயம் முடிகிறது.

Fifteen Million Merits முன் வைக்கும் செயற்கை வாழ்விலுள்ள சிக்கல்கள் எதுவும் நாம் அறிந்திராததல்ல. அத்தகைய வாழ்க்கையின் தொடக்கத்தை நாம் காணத் தொடங்கி விட்டோம். ஸ்டார்களை கொண்டு சக மனிதரின் வேலைத் திறனை மதிப்பிடுகிறோம். திரைகளில் வெல்லும் யாரோ ஒருவரின் வெற்றியில் நம் வெற்றிகளை தீர்த்துக் கொள்கிறோம். சமூக ஊடகங்களிலும் அது உருவாக்கும் மனநிலைகளிலும் நம்மை தொடர்ந்து புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிய பிளாக் மிரர் தொடர் அளிக்கும் பல்வேறு அத்தியாயங்களின் உலகங்களைப் பாருங்கள். நாம் எத்தகைய மிருகத்தின் வாலைப் பிடித்திருக்கிறோம் என தெரிந்து கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories