உலகம்

“1972 உருகுவே விமான விபத்து.. 72 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட பயணிகள்” : திகில் சம்பவத்தின் பின்னணி?

விபத்து நேர்ந்த 72 நாட்களுக்குப் பிறகு மிஞ்சியிருந்தோர் மீட்கப்பட்டனர். இருந்த சில சாக்லெட்டுகள் உண்பண்டங்கள் பனி ஆகியவற்றை உண்டு உயிர் பிழைத்தனர்.

“1972 உருகுவே விமான விபத்து.. 72 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட பயணிகள்” : திகில் சம்பவத்தின் பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

1972ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் இருக்கும் ஒரு ரக்பி விளையாட்டு அணிக்கு சிலி நாட்டில் நடக்கவிருந்த ஒரு பந்தயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வேகவேகமாக பயணத் திட்டம் தீட்டப்பட்டு அவ்வருடத்தின் அக்டோபர் மாதத்தில் சிலி நாட்டுக்கு கிளம்ப ஆயத்தமானது.

ஆண்டிஸ் என்கிற மலைத் தொடரை தாண்டி செல்லவிருந்தது பயணத் திட்டம். அணியினரோடு சேர்ந்து அவர்களின் நண்பர்களுமாக மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 40. ஐந்து பேர் விமானக் குழுவினர். மொத்தமாக 45 பேர்.

உருகுவே நாட்டில் இருக்கும் கரேஸ்கோ சர்வதேச விமானநிலையத்தில் அணி விமானம் ஏறியது. கிளம்பிய கொஞ்ச நேரத்தில் ஒரு தகவல். ஆண்டிஸ் மலைப்பகுதி அருகே புயலுக்கான காலநிலை இருப்பதால் ஒரு இரவு தள்ளிச் செல்ல வேண்டுமென்றது தகவல். விமானம் அர்ஜெண்டினாவின் மெண்டோசாவில் இரவு தரையிறங்கியது. மெண்டோசாவிலிருந்து சிலி நாட்டின் சாண்டியாகோவுக்கு செல்ல வேண்டிய தூரம் 200 கிலோமீட்டர்கள். ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான பகுதிகள் 25,000லிருந்து 26,000 அடி வரை இருந்தன. ரக்பி அணி செல்லவிருந்த விமானம் பறக்கக்கூடிய உயரம் 28,000 அடி.

அடுத்த நாளும் காலநிலை சரியாகிவிடவில்லை. ஆனாலும் அணியினருக்கு அந்நிய நாட்டுக்கு சென்று தன்னுடைய விளையாட்டுத் திறனை காட்ட வேண்டிய அவசியம். தாமதப்படுத்தினால் ஆட்டத்திலேயே கலந்து கொள்ள முடியாது. வேறு வழியில்லை. பிற்பகல் 2.18 மணிக்கு விமானம் வானேறியது.

குரிக்கோ என்கிற பகுதியின் தெற்கில் பறந்தது. வடக்கு பக்கமாக திரும்பி சாண்டியாகோ விமான நிலையத்தை நோக்கி தரையிறங்க வேண்டும் என்பதே இலக்கு. கேட்பதற்கு சுலபமாக இருந்த பயணத் திட்டம் அன்று இருந்த சூழலில் என்னவாகவெல்லாம் மாறவிருக்கிறது என்பதை எவரும் அப்போது கற்பனை கூட செய்திருக்கவில்லை.

ஆண்டிஸ் மலைத்தொடருக்குள் விமானம் சென்றதும் மேகங்கள் மலைகளை மறைத்தன. எதிரே மேகம் மட்டும் இருக்கும் நேரத்தில், விமானம் ஓட்டும் கருவிகள் காட்டும் வழியை பின்பற்றி விமான ஓட்டிகள் விமானத்தை ஓட்டுவர். ரக்பி அணியினரை ஓட்டிச்சென்ற விமானிகளும் அதே வழியைத்தான் பின்பற்றினர். கிட்டத்தட்ட கண்கட்டி காட்டுக்குள் விட்டதை போன்ற சூழல்.

விமானத்தின் கருவி அடுத்த ரேடியோ ஒலிபரப்பு மையம் குரிக்கோவிடம் இருப்பதாக காட்டியது. குரிக்கோவை அடைய கிட்டத்தட்ட 70 கிலோமீட்டர் இருந்தது. பிற்பகல் 3.21 மணிக்கு விமானி லகுராரா சாண்டியாகோ கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டார். குரிக்கோவை அடுத்த ஒரு நிமிடத்தில் விமானம் அடைந்து விடுமென தகவல் கொடுத்தார். விமானம் கடந்த மலைக்கணவாயிலிருந்து குரிக்கோவை அடைய வழக்கமாக 11 நிமிடங்கள் பிடிக்கும். மூன்று நிமிடங்கள் கழித்து விமானி குரிக்கோவை கடந்து கொண்டிருப்பதாகவும் வடக்கு பக்கம் திரும்புவதாகவும் கூறினார்.

விமானத்தை கீழ் இறக்குவதற்கான அனுமதி கேட்டார் விமானி. சாண்டியாகோவில் இருந்த அதிகாரிக்கு விமானம் ஆண்டிஸ் மலையையே இன்னும் தாண்டவில்லை என்கிற உண்மை தெரியவில்லை. விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரத்தை குறைப்பதற்கான அனுமதியை வழங்கி விட்டார். அதுவும் கொஞ்ச நஞ்ச உயரம் அல்ல, 11,500 அடி உயரம் கீழிறங்குவதற்கான அனுமதி.

விமானம் கீழிறங்கத் தொடங்கியதுதான் தாமதம், மேலும் கீழுமாக விமான ஆடியது. ஏதோவொன்று இடித்து விமானம் வேகமாக பல நூறு அடிகளுக்கு கீழிறங்கியது. மூடியிருந்த மேகங்கள் விலகின. மலையை நோக்கி வேகமாக விமானம் சென்று கொண்டிருந்தது. மலையின் உயரமான முகடுகள் வேகமாக பெரிதாகிக் கொண்டிருந்தன.

நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்து உறைத்ததும் விமானிகள் விமானத்தை மேலுயர்த்த ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட விமானம் நேர்கோட்டில் மேல்நோக்கிப் பறந்தது. தரையில் மோதுவதற்கு முன் ஒலிக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது.

பலனில்லை.

இரண்டு மூன்று தடவை விமானம் பலமாக எங்கோ மோதியது. மலைமுகட்டுக்கு மேலாக விமானத்தின் முன்பக்கத்தை வெற்றிகரமாக விமானி உயர்த்தினார். ஆனால் பின்பக்கம் மலைக்கு தப்பவில்லை. விமானம் இடித்ததில் மலை முகட்டின் நுனி இடிந்து விழுந்தது. அடுத்த முறை விமானம் இடித்தபோது வலது பக்க இறக்கை முறிந்தது. முறிந்த இறக்கை பறந்து விமானத்தின் பிற்பகுதியில் மோதியது. பிற்பகுதி உடைந்தது. விமானத்துக்குள் இருந்த கடைசி இரண்டு வரிசைச் சீட்டுகளும் பயணிகளின் உடைமைகளும் விமானத்தின் பிற்பகுதியோடு சேர்ந்து போனது. மூன்று பயணிகளும் இரண்டு விமானக் குழுவினரும் விமானத்தின் பிற்பகுதியோடு சேர்ந்து வெளியே விழுந்திருந்தனர். விமானத்தின் பின்பக்கம் முற்றிலுமாக உடைந்து ஒரு பெரும் ஓட்டையாகி இருந்தது.

விமானம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது. அடுத்த 200 மீட்டர்களில் இடது பக்க இறக்கையும் முறிந்தது. இறக்கையில் இருந்த காற்றாடி வெளியே வந்து பயணிகள் அமர்ந்திருக்கும் விமானப் பகுதியை வெட்டி இரண்டாக்கியது. மேலுமொரு இரண்டு பயணிகள் வெளியே விழுந்தனர். பயணிகள் இருந்த பகுதியின் முன் பக்கம் வேகமாக காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது. மலைச்சரிவில் இடித்து வேகமாகச் சறுக்கியபடி 725 மீட்டர்களுக்கு சென்றது. இறுதியில் ஒரு பனிப்பாளத்தில் இடித்து நின்றது. இடித்ததில் விமானிகள் இருந்த அறை நொறுங்கியது.

விமானத்தில் மிச்சமிருந்த பகுதி கிட்டத்தட்ட 11000 அடி உயரத்தில் கிடந்தது. சில கணங்கள்தாம். எல்லாம் நடந்து முடிந்திருந்தது. 33 பேருக்கு உயிர் மிஞ்சியிருந்தது. கத்தினாலும் கேட்காத உயரம். வெளியே ஓடினாலும் தெரியாத அளவு பனி. தேடல் விமானங்கள் கூட வந்தன. தேடின. கண்டுபிடிக்க முடியாமல் சென்று விட்டன.

ஆச்சரியம் நடந்தது.

விபத்து நேர்ந்த 72 நாட்களுக்கு பிறகு மிஞ்சியிருந்தோர் மீட்கப்பட்டனர். இருந்த சில சாக்லேட்டுகள், உண்பண்டங்கள், பனி ஆகியவற்றை உண்டு உயிர் பிழைத்தனர். அவையும் தீர்ந்த பிறகு, இறப்புக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் கொன்று அவரது உடலை உண்டு பிழைக்கும் நிலையை அவர்கள் தேர்ந்தடுத்தனர்.

விளைவு?

தொடர்பு பழுதால் நேர்ந்த ஒரு பெரும் விபத்தையும் உயிர் பிழைக்க நடந்த கோரங்களையும் உலகம் அவர்களின் வழியாக அறிந்து கொண்டது. எனினும் அந்த விபத்துக்குக் காரணமாக மூட நம்பிக்கை ஒன்றையே மனித அறிவு கற்பித்துக் கொண்டது.

என்ன மூடநம்பிக்கை தெரியுமா?

புயலின் காரணமாக தரையிறக்கப்பட்டு காத்திருந்து மீண்டும் விமானம் கிளம்பிய நாள் அக்டோபர் 13ஆம் தேதி, வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையும் 13ஆம் தேதியும் ஒன்றாகும் நாளில் நடக்கும் எதுவும் உருப்படாது என்பது அமெரிக்கா உருவாக்கிய மூடநம்பிக்கைகளில் ஒன்று.

banner

Related Stories

Related Stories