உலகம்

மக்களே எச்சரிக்கை.. செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்கும் Pegasus செயலி குறித்து ‘பகீர்’ தகவல்!

குறைந்தபட்சம் 80% பேரேனும் பயன்படுத்தும் வாட்சப் செயலியில் வரும் எல்லா தகவல்களையும் நமக்கு அறிமுகமில்லா நபர்கள் பார்த்தால் என்ன ஆகும்? குறிப்பாக அரசு இவற்றை நோட்டம் விட்டால் என்ன ஆகும்?

மக்களே எச்சரிக்கை.. செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்கும் Pegasus செயலி குறித்து  ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆப்பிள் செல்பேசி நாம் அனைவருமே அறிந்திருப்போம். செல்பேசிகளின் உச்சமாக கருதப்படுவது. விலை உயர்ந்தது. அதற்கேற்ப உழைக்கக் கூடியது. வைரஸ் தொல்லையெல்லாம் இருக்காது என்றுதான் நம்பியிருந்தோம். அத்தகைய ஆப்பிள் செல்பேசி நிறுவனம் NSO என்கிற இஸ்ரேலிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறது.

காரணம், பெகாசஸ்!

ஜூலை மாதம் 18ம் தேதி.

உலகை குலுக்கிய ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளியானது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO என்கிற நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் (Pegasus) எனப்படும் உளவு மென்பொருளின் துணைக் கொண்டு உலக நாடுகளின் அரசுகள் பலரின் மொபைல் போன்களுக்குள் ஊடுருவி பேச்சுகளை ஒட்டுக் கேட்பதாக செய்தி.

உலக நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், அறிவியலாளர்கள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரையும் அந்தந்த நாட்டு அரசுகள் ஒட்டுக் கேட்ட விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது என்ன பெகாசஸ்? உளவு மென்பொருள் என்றால் என்ன? ஒட்டுக் கேட்பதால் என்ன தீமை விளைந்திடும்?

இன்றையச் சூழலில் நம் அனைவரின் கைகளிலுமே ஒரு செல்பேசி இருக்கிறது. அதில் இணைய இணைப்பும் இருக்கிறது. வெறும் அழைப்புகளைத் தாண்டி செல்பேசியின் இணையம் வழியாக முகநூல் பயன்படுத்துகிறோம். வாட்சப் பயன்படுத்துகிறோம். இன்னும் பல செயலிகளை (app) பயன்படுத்துகிறோம். குறைந்தபட்சம் 80% பேரேனும் பயன்படுத்தும் செயலி வாட்சப் (Whatsapp).

இச்செயலியில் வரும் எல்லா தகவல்களையும் நமக்கு அறிமுகமில்லா நபர்கள் பார்த்தால் என்ன ஆகும்?

குறிப்பாக அரசு இவற்றை நோட்டம் விட்டால் என்ன ஆகும்?

NSO என்பது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நிறுவனம். இணைய வழி ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை அது அடையாளப்படுத்திக் கொள்கிறது. செல்பேசியின் இணையம் வழியாக செயல்படும் உளவு மென்பொருள்களை தயாரிப்பதே அந்த நிறுவனத்தின் பிரதான வேலை. உளவு மென்பொருளை கொண்டு எளிதாக ஒரு செல்பேசியில் அதன் உரிமையாளரை ஏமாற்றி ஊடுருவ முடியும். அத்தகைய ஒரு உளவு மென்பொருளின் பெயர்தான் பெகாசஸ்.

உதாரணமாக உங்களின் செல்பேசிக்கு ஒரு மெசேஜ் வரலாம். அல்லது ஒரு இமெயில் வரலாம். அது மிகவும் நம்பத்தகுந்த மெசேஜாகவும் இமெயிலாகவும் இருக்கும். பிரபலமான ஒரு செய்தி நிறுவனத்தின் பெயரிலோ அல்லது உங்களின் நண்பரின் பெயரிலோ மெசேஜும் இமெயிலும் வரும். உங்களின் ஆர்வத்தை சார்ந்து அதில் ஒரு லிங்க்கும் இருக்கும். உதாரணமாக உங்கள் நண்பரின் பெயரில் மின்னஞ்சல் வந்து அவரின் புதிய புகைப்படம் போன்ற தகவலுடன் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். லிங்கை க்ளிக் செய்தால் உங்களின் செல்பேசிக்குள் உளவு மென்பொருள் நுழைந்துவிடும்.

எந்தவித லிங்கையும் க்ளிக் செய்யாதவர் நீங்கள் எனில் உங்களின் வாட்சப் செயலிக்கு திடீரென அழைப்பு வரும். நீங்கள் அதை ஏற்கவில்லை எனில், தொடர்ந்து அழைப்பு வரும். நீங்கள் ஏற்கும்வரை அழைப்புகள் வரும். அழைப்பை ஏற்றுவிட்டால், உளவு மென்பொருள் உள்ளே வந்துவிடும். இன்னும் சில வழிகள் இருக்கின்றன. உங்களின் ஒப்புதல் கூட தேவைப்படாத வழிகள். உதாரணமாக ஒரு மெசேஜ் உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விட்டால் மட்டுமே போதும். அதை நீங்கள் பார்க்கக் கூட தேவையில்லை. உங்கள் செல்பேசியை மெசேஜ் அடைந்தாலே உளவு மென்பொருள் உள்ளே வந்துவிடும்.

செல்பேசிக்குள் நுழையும் வழி வேண்டுமானால் வாட்சப்பாக இருக்கலாம். ஆனால் நுழைந்த பிறகு பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் உங்களின் மின்னஞ்சலை இயக்க முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்க முடியும். உங்களின் துணை இன்றியே செல்பேசியை பெகாசஸ் இயக்க முடியும். நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும். உங்களின் குறுந்தகவல்களை வாசிக்க முடியும். செல்பேசியை நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் அதன் கேமராவை கூட பெகாசஸ் இயக்க முடியும்.

உலகம் முழுவதும் NSO நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் முதலியோரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன. பலரின் செல்பேசிகளில் பொய்யான ஆவணங்களை வைத்துவிட்டு அதை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது.

பெகாசஸ் என்கிற உளவுமென்பொருளை கொண்டு மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை அரசுகள் நிகழ்த்த உதவியிருக்கும் இஸ்ரேலிய நிறுவனமான NSO தற்போதைய சர்வதேச ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தது.

”சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அரசுகளுக்கும் அவற்றின் உளவு நிறுவனங்களுக்கும் தீவிரவாதம் மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு தொழில்நுட்பத்தை விற்கிறோம்” எனக் குறிப்பிட்டது.

உளவு பார்க்க பயன்படும் இத்தகைய ஒரு மென்பொருள் இஸ்ரேல் போன்றவொரு நாட்டிலிருந்து வருவதுதான் இன்னொரு முக்கியமான பிரச்சினை. நன்றாக கவனித்து பார்த்தால் இஸ்ரேலிய அரசின் தலையீட்டோடு நடத்தப்படும் உளவு மென்பொருள் வியாபாரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதல் உலக நாடுகளுடன் நடத்தப்படவில்லை. அசெர்பைஜான், ஹங்கேரி, இந்தியா, மொராக்கா, மெக்சிகா, சவுதி அரேபியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் பெகாசஸ் இயங்கியிருக்கிறது.

தன் மக்களை ஒட்டுக் கேட்க விரும்பும் அரசு இயல்பாகவே மக்களுக்கு விரோதமான அரசாகவே இருக்க முடியும். மக்கள் விரோத அரசுகள் சர்வாதிகார அரசுகளாகவே இருக்கும். மூன்றாம் உலக நாடுகளில் சர்வாதிகார அரசுகள் ஆட்சியில் இருப்பதை இஸ்ரேலும் அதை இயக்கும் அமெரிக்காவும் விரும்பும் காரணமும் இந்த உளவு மென்பொருள் விவகாரத்துக்கு பின் ஒளிந்திருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் தற்போது ஆப்பிள் நிறுவனம் NSO நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. பிற தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், மெட்டா (முகநூல்), கூகுள் முதலியவை ஆப்பிள் நிறுவனத்தின் சட்ட நடவடிக்கையை விமர்சித்திருக்கின்றன. அத்துமீறி தகவல் எடுப்பது அந்நிறுவனங்களுக்கு பிரச்சினையாய் தெரியவில்லைப் போலும்.

வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறலை தடுக்க வழக்கு தொடுத்திருப்பதாகக் குறிப்பிடும் ஆப்பிள் நிறுவனம், ஆப்பிளின் எந்தவித மென்பொருள், சேவைகள், உபகரணங்கள் முதலியவற்றை NSO நிறுவனம் பயன்படுத்தக் கூடாதென தடையும் கோரியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories