உலகம்

நீதி, சட்டம், அடக்குமுறை என ஏதுமில்லா ஒத்த கருத்துடைய பெண்களின் அதிகார ஆட்சி; எங்கு தெரியுமா?

நொய்வா டோ கார்டெய்ரோ, புது வகை ஆட்சி கொண்ட சமூகம் என சொல்லப்பட பலக் காரணங்கள் இருக்கின்றன.

நீதி, சட்டம், அடக்குமுறை என ஏதுமில்லா ஒத்த கருத்துடைய பெண்களின் அதிகார ஆட்சி; எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பிரேசில் நாட்டில் ஓர் ஆச்சரியம்.

பிரேசில் நாட்டின் தென்கிழக்குப் பகுதிக்கு செல்வோம். இங்கு ஒரு சமூகம் இருக்கிறது. தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இச்சமூகத்துக்கு பெயர் Noiva Do Cordeiro. இச்சமூகத்தில் ஒரு முக்கியமான சிறப்பு இருக்கிறது. இங்கு ஆண்களிடம் அதிகாரம் கிடையாது. பெண்கள் அதிகாரம் கொண்ட சமூகம்!

பெண்களிடம் அதிகாரமா?

பல நாடுகளிலும் மாநிலங்களிலும் பெண்கள் ஆண்டிருக்கின்றனர். மோசமான ஆட்சிகளும் இருந்திருக்கிறது. சிறந்த ஆட்சிகளும் இருந்திருக்கிறது. அப்படியிருக்க பிரேசிலில் இருக்கும் இச்சமூகத்தின் பெண் அதிகாரத்தில் மட்டும் என்ன புதுமை?

எந்தவொரு ஆட்சியும் புதிதாக இருக்குமெனில் அந்த ஆட்சி நேரும் சமூகத்தின் உறவுகள் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஆட்சி புதுவகை ஆட்சி என அர்த்தம் பெறும். ஏற்கனவே இருக்கும் சமூக உறவுகள் புதிய ஆட்சியிலும் தொடருமானால் அது புது வகை ஆட்சியாகாது. இருக்கும் சூழலை தக்கவைக்கும் மற்றுமோர் ஆட்சியாகவே இருக்கும்.

நொய்வா டோ கார்டெய்ரோ, புது வகை ஆட்சி கொண்ட சமூகம் என சொல்லப்பட பலக் காரணங்கள் இருக்கின்றன.

வன்முறை நிகழ்வு எதுவும் அங்குக் கிடையாது. அதிகார அடுக்குமுறை கிடையாது. தனிச்சலுகைகளும் இல்லை. கிராமத்தின் தலைவராக டெலினா என்கிற மூத்த பெண் இருக்கிறார். இருவருக்கு இடையில் சண்டை நேர்ந்தால் கையாள நீதிமன்றம் போன்ற அமைப்பு எதுவும் இல்லை. நீண்ட நெடிய உரையாடல்கள் கொண்டு தீர்த்துக் கொள்கிறார்கள். வருமானத்திலும் பேதம் கிடையாது. எல்லாருக்கும் சமமான ஊதியம். கிடைக்கிற முதலீடுகளில் எல்லாரும் எல்லாருக்கும் உதவிக் கொள்கின்றனர். தற்பாலின சேர்க்கைக்கு அனுமதி உண்டு. குழந்தைகளை எல்லாரும் பார்த்துக் கொள்கிறார்கள். முதியவர்களும் நோயாளிகளும் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். ஊருக்கு நடுவே இருக்கும் சமூகக் கூடத்தில் எல்லாருக்கும் உணவு பல முறை சமைக்கப்படுகிறது. மொத்த ஊருக்கான அதிகாரமும் பெண்களிடமே இருக்கிறது.

நாம் அறிந்த பெண்கள் ஆண்ட ஆட்சிகளில் இத்தகைய விஷயங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆணின் ஆட்சியில் இருக்கும் அதே வகைச் சட்டம், நீதிமன்றம், ஒடுக்குமுறை, மதம், அதிகார அடக்குமுறைகள் எல்லாமும் இருக்கும். ஆகவே பெண்கள் ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அது பெண்ணின் ஆட்சியாக கருத முடியாது. அங்கு பெண்கள் விருப்பத்துக்கு சமூகம் இருப்பதாகவும் எண்ண முடியாது. ஆண் உருவாக்கியிருக்கும் அதிகாரத்துக்குள் ஒரு பெண்ணின் ஆட்சி இருப்பதாகவே மட்டும் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போதும் ஆணுக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே நடைபெறுமே ஒழிய, பெண்ணுக்கான விடிவு கிடைக்காது.

நொய்வா டோ கார்டெய்ரோவில் 600 பெண்கள் இருக்கின்றனர். மகன்கள் 18 வயதான பிறகு கிராமத்திலிருந்து அனுப்பப்பட்டுவிடுவார்கள். அங்கு வாழும் பெண்களுக்கு கணவராக விரும்புபவர்கள் அங்கிருக்கும் பெண் அதிகாரத்துக்கு உட்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இப்படியொரு கிராமம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் ஒரு சம்பவம்.

நீதி, சட்டம், அடக்குமுறை என ஏதுமில்லா ஒத்த கருத்துடைய பெண்களின் அதிகார ஆட்சி; எங்கு தெரியுமா?

1890களில் ஓர் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அவருக்கு திருமணத்தில் உடன்பாடில்லை. ஆனால் அவர் பேச்சை எவரும் பொருட்படுத்தவில்லை. மனம் ஒப்பாத அந்த இளம்பெண் மணம் முடித்தவனை விட்டு விலகினார். பிரச்சினை, கத்தோலிக்க தேவாலயத்துக்கு சென்றது. அங்கு இருப்பவர்கள் அனைவரும் பேசி ஒரு தீர்ப்பு வழங்கினர்.

இளம்பெண்ணுக்கு கள்ள உறவு இருப்பதாக சொல்லி பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். ஆனால் அது அப்பெண்ணுக்கு முடிவாக இருந்துவிடவில்லை.

புதியதொரு தொடக்கமாக மாறியது.

திருமணம் விரும்பாத பெண்களும் திருமணமாகி கணவன் பிரிந்து சென்ற பெண்களும் இளம்பெண் ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்துக்கு வந்து சேரத் தொடங்கினர். புதிய ஒரு சமூகம் உருவாகத் தொடங்கியது. ஆண்கள் பலர் அம்முயற்சியை குலைக்க முயன்றனர். நடக்கவில்லை.

ஆனாலும் அத்தகையக் குலைவின் விளிம்பு வரை அச்சமூகம் செல்லும் நிலை ஏற்பட்டது.

1940ம் ஆண்டில் ஒரு கிறித்துவ பாதிரியார் கிராமத்துக்கு வந்திருக்கிறார். அங்கு இருந்த ஓர் இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். சமூகத்தின் பெண்களும் அவரை அங்கேயே இருக்க அனுமதித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்திலேயே அவர் ஒரு தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். மதரீதியான சட்டங்களை திணிக்கத் தொடங்கினார். மதம் என்கிற அதிகார அமைப்பு பரவலாகத் தொடங்கியது. இசை கேட்கக்கூடாது, முடி வெட்டிக் கொள்ளக் கூடாது, கருத்தடை சாதனம் பயன்படுத்தக் கூடாது என பலக் கட்டுப்பாடுகள்.

ஒரே ஒரு ஆணை கிராமத்தில் தங்கவிட்டதால், அதிகாரத்துக்குள் சிக்கி சுதந்திரத்தை இழந்தனர் பெண்கள். 1995ம் ஆண்டு அந்த ஆண் இறந்து போனான். அதற்கு பிறகு பெண்கள் எந்தவொரு ஆணும் தங்களையும் தங்களின் வாழ்க்கைகளையும் கட்டுப்படுத்த விட்டுவிடக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

பிறகு அங்கு மத பீடம் எதுவும் இல்லை. ஆணின் அதிகாரமும் இல்லை. அவர்களுடைய கருத்து ஒன்றாக மட்டும்தான் இருக்கிறது.

“எங்களின் கடவுளர் எங்கள் மனங்களில் இருக்கின்றனர். தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு நாங்கள் போக வேண்டியதில்லை என நினைக்கிறோம். ஒரு கடவுளின் ஊழியர் முன்னால் திருமணம் செய்து கொள்ளவும் எங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வேண்டுமென்ற அவசியமும் எங்களுக்கு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் யாவும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை” எனக் கூறுகின்றனர்.

சரிதானே!

banner

Related Stories

Related Stories