உலகம்

உலகையே ஈர்த்த மிகப்பெரும் நடிகையின் அழியாத சோகம்... யாரை கடைசியாக அழைத்தார் மர்லின் மன்றோ?

நொறுங்கிய குழந்தைப் பருவத்தை கொண்டிருந்த மர்லின் மன்றோ, தான் ஒரு குழந்தை பெற்று அதற்கொரு நல்ல வாழ்க்கை அளித்து வளர்க்க வேண்டுமென விரும்பினார்.

உலகையே ஈர்த்த மிகப்பெரும் நடிகையின் அழியாத சோகம்... யாரை கடைசியாக அழைத்தார் மர்லின் மன்றோ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி, 1962. இரவு 8 மணி.

மர்லின் மன்றோ அவரின் ப்ரெண்ட்வுட் வீட்டில் இருந்தார். உறங்கவென படுக்கையறைக்கு சென்ற சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர் பீட்டர் லாஃபோர்ட். அந்த இரவு ஒரு விருந்துக்கு அழைப்பதற்காக அழைத்திருந்தார். மர்லின் மன்றோவின் பேச்சில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார். போதை மருந்துகள் எடுத்தவர் போல் பேசினார் மர்லின் மன்றோ. அப்போது ஒரு முக்கியமான வாக்கியத்தை சொன்னார்:

‘நான் விடைபெறுவதாக பேட்டிடம் சொல்லிவிடு. ஜனாதிபதியிடம் சொல்லிவிடு. உன்னிடமும் சொல்லிக் கொள். ஏனெனில் நீ ரொம்ப நல்லவன்’ எனச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதிகாலை 3.30 மணி.

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த பணிப்பெண் விழித்தெழுந்தார். மர்லின் மன்றோவின் படுக்கையறைக்குள் எரிந்த விளக்கின் வெளிச்சம் கதவின் இடுக்கு வழியாக பிரச்சினையை அறிவித்தது. ஓடிச் சென்று கதவைத் தட்டினார். திறக்கப்படவில்லை. படுக்கையறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார் பணிப்பெண். குப்புற படுத்திருந்தார் மர்லின் மன்றோ. போர்வை போர்த்தியிருந்தது. அவருடைய ஒரு கை தொலைபேசி ரிசீவரை இழுத்துப் பிடித்திருந்தது. ஜன்னல் உடைக்கப்பட்டது.

உலகத்தையே ஈர்த்த ஒரு மிகப்பெரும் நடிகை இறந்துகிடந்தார். மர்லின் மன்றோவின் உடல் உயிர் நீத்திருந்தது.

மர்லின் மன்றோவின் பால்யகால வாழ்க்கை, குடும்பத்தை அறியவில்லை. நிலையான அன்பு அல்லது உறவு என்பதே அவருக்கு கிடைக்கவில்லை. மிகவும் கொஞ்ச காலமே தாயுடன் வாழந்தார். பிறகு வளர்ப்பு பெற்றோர், அண்டை வீட்டார், தாயின் நண்பர்கள், அநாதைக் காப்பகங்கள் என அலைக்கழிப்பான வாழ்க்கை. கிட்டத்தட்ட 12 குடும்பங்களில் அவர் வாழ்ந்தார். அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர் மீது தனித்த அக்கறை இருக்கவில்லை. ஒரு காப்பகத்தில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சோகம் கூட நடந்தது.

மர்லின் மன்றோவுக்கு 16 வயதே ஆகியிருந்தபோது 21 வயது ஜேம்ஸ் டோவ்கெர்டிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னமே வாழ்க்கை முடிவதற்கான சூழல்! ஆனால் அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. ஜேம்ஸ் கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவருக்கான பணியிடம் வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டது. மர்லின் மன்றோவுக்கு வேறு வழி இருக்கவில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார். ராணுவ ஆலை ஒன்றில் வாரக்கூலிக்கு வேலை பார்க்கத் தொடங்கினார். அங்குதான் அவருக்கு முக்கியமான மாற்றம் நேர்ந்தது.

உலகையே ஈர்த்த மிகப்பெரும் நடிகையின் அழியாத சோகம்... யாரை கடைசியாக அழைத்தார் மர்லின் மன்றோ?

ஒரு புகைப்படக் கலைஞரின் கண்ணில் பட்டார் மர்லின் மன்றோ. அவரது அழகு புகைப்படம் ஆனது. விளம்பரங்கள், சினிமா முதலிய துறைகளில் மர்லின் மன்றோவுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை அந்த கலைஞர் மர்லின் மன்றோவுக்கு வெளிப்படுத்தினார். 1946ஆம் ஆண்டு மர்லின் மன்றோ ஜேம்ஸ்ஸை விவாகரத்து செய்தார் மர்லின் மன்றோ. விளம்பரங்களுக்கான மாடலாக பணிபுரிந்தபடி, சினிமாவுக்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்துடன் 1946ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒப்பந்தமானார் மர்லின் மன்றோ. ஆனால் அந்த வாய்ப்பு பிறகு பறிக்கப்பட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து 1948ஆம் ஆண்டில் கொலம்பியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனார். அந்த வாய்ப்பும் பிறகு பறிபோனது.

வாழ்க்கை தள்ளாடியது. வருமானமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 50 டாலர் பணத்துக்காக 1949ஆம் ஆண்டில் நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார். அடுத்த வருடத்தில்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக் கிடைத்து நடித்து நடிகை என்கிற இடத்தை அடைந்தார். 1953ஆம் ஆண்டில் பத்திரிகை நடத்தும் ஆர்வத்தில் இருந்த ஹூக் ஹெஃப்னர் என்பவர் வறுமையின் காரணமாக மர்லின் மன்றோவின் நிர்வாணப் புகைப்படத்தை விலை கொடுத்து வாங்கி தன்னுடைய ‘ப்ளே பாய்’ பத்திரிகையின் முதல் இதழில் பதிப்பித்தார். அதற்கென ஒரு நன்றி கூட தெரிவிக்கப்படவில்லை எனப் பிற்காலத்தில் மர்லின் மன்றோ வருத்தம் தெரிவித்ததும் நடந்தது.

1953ஆம் ஆண்டு வெளியான நயாகரா என்கிற படம் தான் அவருக்கான புகழைத் தொடங்கி வைத்தது. கள்ள உறவு கொண்டு கணவனை கொல்லத் திட்டமிடும் இளம் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மர்லின் மன்றோ. அந்தப் படத்துக்கு பிறகு Gentleman Prefer Blondes மற்றும் How to marry a Millionaire என்கிற இரு படங்கள் மர்லின் மன்றோவின் நடிப்பில் வெளியாகி பெருவெற்றி அடைந்தன. ஹாலிவுட் சினிமாவுலகின் முன்னணி நடிகை என்கிற இடத்தைப் பெற்றார்.

மர்லின் மன்றோவின் அழகு பல படிமங்களைக் கொண்டது. நேர்மை, பதற்றம், காதல், இளமை, துடிப்பு, குழப்பம், சோகம் எல்லாவற்றையும் ஒன்றாய் பிரதிபலிக்கும் முகம். எல்லா உணர்வுகளும் ஒன்றுபடுகையில் அது கொடுக்கும் ஈர்ப்பு நம் மனதை மயக்கவல்லது.

ஒரு துணை, ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை என ஏங்கியிருந்த மர்லின் மன்றோவுக்கு அவை இறுதி வரை கிடைக்கவே இல்லை. நொறுங்கிய குழந்தைப் பருவத்தை கொண்டிருந்த மர்லின் மன்றோ, தான் ஒரு குழந்தை பெற்று அதற்கொரு நல்ல வாழ்க்கை அளித்து வளர்க்க வேண்டுமென விரும்பினார். சோகம் என்னவெனில் அவருக்கு குழந்தை தங்கவில்லை. இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைந்து போனது. அதற்குப் பிறகு நேர்ந்த விவாகரத்தும் சேர்ந்து கொண்டு மர்லின் மன்றோவை அதிகமாக போதை மருந்துகளுக்குள் தள்ளியது.

நிம்மதியான தூக்கம் எப்போதும் வாய்த்ததே இல்லை அவருக்கு. கூடவே கருப்பை நோயும் அவருக்கு இருந்தது. நோய் கொடுக்கும் வலியும் அவரை ரணப்படுத்திக் கொண்டிருந்தது. வாழ்க்கை, ஆரோக்கியமின்மை, தூக்கமின்மை, மன அழுத்தம், தனிமை என தடுமாறிக் கொண்டிருந்தார் மர்லின் மன்றோ. வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் ஆகியவற்றில் தஞ்சம் அடைந்தார்.

இவை அனைத்தின் விளைவும்தான் 1962ம் ஆண்டின் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு.

யாரையோ அழைக்க முயன்று தோற்று மருந்துகள் உதவ முடியா தூரத்துக்கு மர்லின் மன்றோ சென்று மறைந்தார்.

banner

Related Stories

Related Stories