உலகம்

“காலநிலை மாற்றத்துக்கான முதல் காரணம் முதலாளித்துவம்தான்” : பிரெஞ்சு பாலினீசியா நாடு சொல்லும் பாடம் என்ன?

காலநிலை மாற்றத்துக்கான தீர்வையும் முதலாளித்துவத்திடமே சென்று தேடுவதை விட முட்டாள்தனம் வேறு இருக்க முடியுமா?

“காலநிலை மாற்றத்துக்கான முதல் காரணம் முதலாளித்துவம்தான்” : பிரெஞ்சு பாலினீசியா நாடு சொல்லும் பாடம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பார்ப்பதற்கே மனதை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அழகு பெற்ற தீவுக்கூட்டங்கள் கொண்ட நாடு ஃப்ரெஞ்ச் பாலினீசியா. பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட நாடு. கிட்டத்தட்ட 118 தீவுப் பரப்புகள் இந்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் 67 தீவுகள் மட்டுமே மனிதர்கள் வாழும் பகுதிகள். பிறவற்றில் மனித நடமாட்டம் கிடையாது. பெரும்பாலானவை மணல்திட்டுகளாகவும் பிறவை மனித வாழ்வறியா தீவுகளாகவும் இருக்கின்றன. பிரஞ்சு பாலினீசியா நாடு, சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்க பூமி.

தற்போது நேர்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் கடலோர நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை விடுத்திருப்பது போல் ஃப்ரெஞ்சு பாலினீசியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாட்டை சுற்றி இருக்கும் கடலின் மட்டம் கடந்த சில வருடங்களாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ப்ரெஞ்சு பாலினீஷியாவின் இருப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. வேறு வழியில்லை. ப்ரெஞ்ச் பாலீனீசிய நாட்டு அரசு தன்னுடைய இருப்பைக் காத்துக் கொள்ள உதவிகளை நாடத் தொடங்கியது. அப்படி அவர்களுக்கு உதவியாக வந்த ஒரு நிறுவனம்தான் Seasteading Institute.

2016ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் Seasteading நிறுவனம் ஃப்ரெஞ்ச் பாலினீசிய அரசு அதிகாரிகளை சந்தித்தது. பாதுகாக்கப்பட்ட ஒரு மணற்திட்டிலோ கடற்குளத்திலோ ஒரு மிதக்கும் நகரத்தை கட்டுவதற்கான திட்டத்தை விளக்கினார்கள். அச்சந்திப்பை முன்னாள் சுற்றுலா அமைச்சரான மார்க் காலின்ஸ் ஒருங்கிணைத்திருந்தார்.

“காலநிலை மாற்றத்துக்கான முதல் காரணம் முதலாளித்துவம்தான்” : பிரெஞ்சு பாலினீசியா நாடு சொல்லும் பாடம் என்ன?

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு எந்த பகுதியில் மிதக்கும் நகரம் அமைப்பது என்ற ஆய்வு தொடங்கியது. Seasteading Institute சார்பில் ஒரு குழு ஆய்வு செய்தது. தஹிதி, துபாய் மற்றும் ரையாட்டீ போன்ற தீவுகளை திட்டத்துக்கு சரியான பகுதிகளாக இருக்கும் என ஆய்வுக்குழு தீர்மானித்தது.

”ப்ரெஞ்ச் பாலினீசிய அரசுடன் இணைந்து மிதக்கும் தீவுகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். இம்முயற்சி அந்த நாட்டுக்கும் மிதக்கும் நகரங்களை அமைக்கும் சர்வதேச சமூகத்துக்கு பெரும் ஆதாயங்களை கொடுக்கும்” எனப் பேசினார் ராண்டால்ஃப் ஹென்க்கென். Seasteading நிறுவனத்தின் இணை இயக்குநர்.

ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து நான்கு வருடங்களில் முதல் மிதக்கும் நகரத்தை கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதால்.

மிதக்கும் தீவு கட்டுமானத்துக்கென பிரத்யேகமாக ப்ளூ ஃப்ராண்டியர்ஸ் என்கிற நிறுவனம் துவங்கப்பட்டது. உலகம் முழுக்கவிருந்து 100க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பல அணிகளாக வேலை பார்த்தனர். ஆற்றல் மற்றும் நீர் அமைப்புகள், உணவு அமைப்பு, தற்சார்பு, தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வடிவமைக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட பரிசோதனைக் கட்டம் முடிந்தது.

புதிய தீவுக்கென தனி பணமும் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. கட்டுமான வேலையை கடலில் தொடங்குவதுதான் பாக்கி. அந்த நேரத்தில்தான் ஒரு முக்கியமான பிரச்சினை நேர்ந்தது. அப்பிரச்சினை மிதக்கும் நாடு மற்றும் நகரம் பற்றிய கருத்தையே வேறு கோணத்தில் ஆராய்வதற்கான சூழலை உருவாக்கியது.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தஹிதியை சேர்ந்த மக்கள் நிறுவனத்துக்கு எதிராக பெரும் ஊர்வலத்தை நடத்தினர். அம்மக்களுக்கு கடலே ஆதாரம். மீன் முதலிய வழிகளில் மக்கள் தங்களின் வாழ்க்கைகளை ஓட்டுகின்றனர். மிதக்கும் நகரங்கள் உருவான பின், அந்த கடல் பகுதி மாசுப்படும் என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. அதைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் நிறுவனத்திலிருந்து உவப்பான பதில்கள் வரவில்லை.

“காலநிலை மாற்றத்துக்கான முதல் காரணம் முதலாளித்துவம்தான்” : பிரெஞ்சு பாலினீசியா நாடு சொல்லும் பாடம் என்ன?

Seastead நிறுவனம் மற்றும் மிதக்கும் நகரத்துக்கு எதிராக தஹிதி மக்கள் நடத்திய போராட்டம்தான் அந்நிறுவனத்தின் உண்மையான நோக்கங்களை கேள்விக்குட்படுத்தக் காரணமானது. Seasteading Institute சொல்லி வந்த காரணங்களுக்கு பின்னான உண்மை நோக்கங்கள் வெளிவரத் தொடங்கியது.

மிதக்கும் நாடு பற்றிய கருத்து முன் வைக்கப்படுகையில் நிறுவனம் முன் வைக்கும் முக்கியமான ஒரு விஷயம், சுதந்திர வணிகம்! அதாவது, யார் வேண்டுமானாலும் வரலாம் தங்கலாம். வெவ்வேறு வகை அரசுகள் இருக்கும். புதுப்புது கருத்துகளுக்கு ஏற்ப அரசுகள் உருவாக்கிக் கொள்ளலாம் போன்றவையே Seasteading நிறுவனத்தின் விளம்பரமாக இருந்தது. அடிப்படையில் ‘அரசு’ என்பதை ஒரு வியாபாரப் பண்டமாக அந்த நிறுவனம் மாற்றியிருந்தது.

எந்த அரசு மற்றும் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் தனி நாடாக நிறுவனங்கள் இயங்கும்போது யாருக்கும் வரி கட்டத் தேவையில்லை. எந்த கட்டுப்பாடும் இருக்காது. இத்தகைய முயற்சியின் இன்னொரு நோக்கம் என்னவெனில், ஒருவேளை மிதக்கும் நகரங்கள் என்கிற விஷயம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டால் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டையும் நாடிப் போக வேண்டியிருக்காது. அரசின் உதவியை வேண்டும் அவசியமும் இருக்காது. அப்படியான ஒரு சூழலில் அரசுகள் வேறு வழியின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்படும்.

Seasteading நிறுவனமும் அதையே செய்தது. ஆனால் தங்களின் நிலம் பறிபோவது அரசுக்கு தெரிவதை விட அந்த நிலத்தில் வாழும் மக்களுக்கே முதலில் தெரிய வரும். தஹிதி மக்கள் தொடங்கிய அப்போராட்டம் அரசை அசைத்து பார்த்தது. மிதக்கும் நகரத் திட்டம் அரசால் கைவிடப்பட்டது.

மொத்த மனித குலத்தையே முட்டுச்சந்தில் நிறுத்தி வைத்திருக்கும் காலநிலை மாற்றத்துக்கான முதல் காரணம் முதலாளித்துவம். காலநிலை மாற்றத்துக்கான தீர்வையும் முதலாளித்துவத்திடமே சென்று தேடுவதை விட முட்டாள்தனம் வேறு இருக்க முடியுமா?

ஆனாலும் பன்னாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் காலநிலை மாற்றத்தில் அக்கறை காட்டுகின்றன. முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. காலநிலை மாற்றப் பிரச்சினையை தீர்த்தே ஆக வேண்டுமென துடிக்கின்றன. இறுதியில் அவை கொண்டு வரும் தீர்வுகளை பார்த்தால் மிதக்கும் நாடுகள் போன்ற பாசாங்குகளாக மட்டும்தான் இருக்கின்றன.

மனித இனம் அழிவதிலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதுதான் பணக்காரனின் யோசனையாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories