உலகம்

துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!

அமெரிக்காவின் வெள்ளையின மக்களில் 48% பேரிடம் துப்பாக்கி இருக்கிறது.

துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நேற்று ஒரு செய்தியை அனைவரும் பார்த்திருக்கலாம். மதுரையில் ஒரு ரவுடி வழிப்பறி செய்திருக்கிறார். வெறும் வழிப்பறி அல்ல. துப்பாக்கி காட்டி வழிப்பறி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர் கொடுத்தப் புகாரின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கி என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது மேற்கத்திய சினிமாக்கள்தான். மேற்கத்திய சினிமா என்றாலும் அமெரிக்க சினிமாவில்தான் அதிக துப்பாக்கிகள் தென்படும். ஐரோப்பிய படங்களில் சற்றுக் குறைவாகவே துப்பாக்கிகள் வரும். சினிமா உருவாக்கத்தில் அமெரிக்காவுக்கு இருக்கும் தனி பாணியே துப்பாக்கி சார்ந்த களங்களை அதிகமாக சினிமாவுக்கு அளித்தது. துப்பாக்கியால் எதிரிகளை சுடும் பாத்திரங்களை ஹாலிவுட் படங்களே நமக்கு அதிகமாக பரிச்சயப்படுத்தின.

அமெரிக்காவுக்கும் துப்பாக்கி கலாசாரத்துக்கும் அதிக தொடர்புண்டு. 2019-ம் ஆண்டில் மட்டும் 38300 மரணங்கள் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 23,900 மரணங்கள் தற்கொலைகள். கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காட்டிலும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகமாக இருக்கிறது.

துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!

உலக நாடுகளிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனி நபரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். ஒவ்வொரு 100 குடும்பங்களிலும் 121 துப்பாக்கிகள் இருக்கின்றன. உலக மக்கள்தொகையிலேயே 5% மக்கள்தொகையைதான் அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால் துப்பாக்கிக்கான தனியார் உரிமங்கள் 40% அமெரிக்காவில்தான் இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் துப்பாக்கிக்குமான தொடர்பு அதன் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது. அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு எதிராக பிரிய முயன்ற அமெரிக்க மாகாணங்களை கட்டுப்படுத்த 1861ம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்த காலம் தொட்டே துப்பாகிகள் வைத்துக் கொள்வது என்பது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை அமெரிக்க அரசியல் சாசனமும் மக்களுக்கு வழங்குகிறது. வரலாற்று பெருமையாக, குடும்ப கவுரவமாக துப்பாக்கி அமெரிக்கர்களுக்கு இருக்கிறது.

விளையாட்டுக்கெனவும் வேட்டைக்கெனவும் துப்பாக்கிகள் பயன்படுத்துவதும் அங்கு இயல்பு. தற்காப்புக்காக என்றே அமெரிக்கர்கள் பிரதானமாக துப்பாக்கி பயன்பாட்டை நியாயப்படுத்துகிறார்கள். வேட்டை, தற்காப்பு என்பதோடு நிற்காமல் துப்பாக்கி புழக்கம் அங்கிருக்கும் அரசியலுக்கும் நிறவெறிக்கும் கூட துணை போகும் வழக்கம் உருவானதால் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து நாட்டையே அசைத்து பார்க்கும் கட்டத்தை அடைந்துவிட்டன. விளைவாக, துப்பாக்கி பயன்பாட்டை குறித்து இருவேறு முகாம்கள் அரசியலிலேயே உருவாகிவிட்டன.

துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!

அமெரிக்கர்களுக்கு துப்பாக்கிகளுடன் இருக்கும் உறவை ஆராய்ந்து பல ஆய்வறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன. அதில் பல ஆச்சரியமான அதிர்ச்சிக்குரிய விஷயங்களும் வெளிவந்திருக்கிறது. சொந்தமாக துப்பாக்கி வைத்திருந்தாலும் இல்லையென்றாலும் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு துப்பாக்கி பயன்படுத்த தெரிந்திருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு மக்கள் துப்பாக்கி வைத்திருக்கும் குடும்பங்களுடன் ஏதோவொரு தரணத்தில் வாழ்ந்திருக்கின்றனர். 55% மக்கள்தொகையிடம் சொந்தமாக துப்பாக்கி இல்லை. எனினும் அவர்கள் உள்ளிட்டு பத்தில் ஏழு பேர் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்க்கைகளில் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். தற்போதைய நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பத்து பதின்வயதினரில் மூவர் துப்பாக்கியை சொந்தமாக வைத்திருக்கின்றனர். துப்பாக்கி தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வோம் என 36% பேர் கூறுகின்றனர்

44% பதின்வயதினர் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒருவருடன் நட்பில் இருக்கிறார்கள். 23% பேர் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் துப்பாக்கியால் யாரோ ஒருவரால் மிரட்டப்படுவதை பார்த்திருப்பதாக கூறுகின்றனர். அமெரிக்க மக்கள்தொகையில் பாதி பேர் துப்பாக்கி வன்முறை அமெரிக்காவில் பெரும் பிரச்சினையென கருதுகின்றனர்.

அமெரிக்காவின் வெள்ளையின மக்களில் 48% பேரிடம் துப்பாக்கி இருக்கிறது. ஒப்பீட்டளவில் 24% வெள்ளையின பெண்களும் அதே அளவு வெள்ளையினம் அல்லாதவர்களும் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். முக்கியமாக கல்விக்கும் துப்பாக்கி பயன்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். வெள்ளையின மக்களில் 41% துப்பாக்கி வைத்திருக்கும் மக்கள் இளங்கலை பட்டப்படிப்பு கூட முடித்திருக்கவில்லை.

துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!

துப்பாக்கி பயன்படுத்துவோர், துப்பாக்கியால் பாதிக்கப்பட்டோர், துப்பாக்கி பயன்படுத்தியதை பார்த்தோர், துப்பாக்கி பயன்படுத்த விரும்புவோர் என துப்பாக்கி நீக்கமற நிறைந்திருக்கும் அமெரிக்க சமூகத்தின் உளவியலில் ஆபத்துக்கு பஞ்சமில்லை.

உலகம் அதன் இயல்பிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுச் சூழல்கள் புதுப் பிரச்சினைகளை கொடுக்கின்றன. புதுச் சூழல்களை விரும்பும் உலகம் புதுப் பிரச்சினைகளுக்கு தன்னை தயாரித்துக் கொள்வதில்லை. பிரச்சினைகள் நேர்ந்த பிறகுதான் அதற்கான தீர்வுகளை யோசிக்கத் தொடங்குகிறது. காலதாமதமாக யோசிக்கப்படும் தீர்வுகளால் பலியாவதென்னவோ அப்பாவி உயிர்கள்தான்.

banner

Related Stories

Related Stories