உணர்வோசை

“அமெரிக்காவால் எதிர்க்க முடியாதவரை எதிர்த்து படமெடுத்த சாப்ளின்” : கடைசியில் அமெரிக்கா பணிந்தது ஏன்?

அமெரிக்கா கூட ஹிட்லரை எதிர்க்கத் துணிந்திராத காலத்திலேயே அவரை எதிர்த்துப் படம் எடுத்தவர் சாப்ளின்.

“அமெரிக்காவால் எதிர்க்க முடியாதவரை எதிர்த்து படமெடுத்த சாப்ளின்” : கடைசியில் அமெரிக்கா பணிந்தது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

1921ஆம் ஆண்டில் The Kid என்கிற படத்தை சாப்ளின் எடுத்துக் கொண்டிருந்த காலம். பஸ்டர் கீட்டன் என்கிற சக நடிகருடன் சாப்ளின் பேசிக் கொண்டிருந்தார், ‘கம்யூனிசம் எல்லாவற்றையும் மாற்றப் போகிறது. வறுமையை ஒழித்துவிடும்’ என்றவர், தொடர்ந்து, ‘ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான சாப்பாடும், காலுக்கு செருப்பும் வாழ்றதுக்கு ஒரு கூரை கொண்ட வீடும் கிடைக்கணும்ங்கறதுதான் என் ஆசையெல்லாம்’ எனவும் கூறியிருக்கிறார்.

எல்லாமுமே எல்லாருக்கும் கிடைத்து சந்தோஷத்துடன் வாழ முடியும் என உலகுக்கே உணர்த்திய சோவியத் யூனியனின் புரட்சி ஏற்பட்ட காலத்தில்தான் சாப்ளின் அமெரிக்காவுக்கு பிழைப்புத் தேடி வந்தார். அங்கு அவர் கண்ட விஷயங்கள் எதுவும் உவப்பாக இருக்கவில்லை. கடுமையான வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. 1919ஆம் ஆண்டில் 9,50,000 பேராக இருந்த வேலையில்லா பட்டாளம் இரண்டே வருடங்களில் ஐம்பது லட்சத்தை தொட்டது. அந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டனர். அதையும் மீறி அமெரிக்காவின் பிற இடங்களில் வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இயல்பாகவே சாப்ளினின் மனநிலையில் அச்சூழல் ஆழமாக பதிந்தது. சார்லி சாப்ளினின் படங்கள் எல்லாமுமே அவரின் சிந்தனையை பிரதிபலித்தது.

சாப்ளினின் பெரும்பாலான படங்களில் இருக்கும் நாயகன் ஒரு நாடோடி. தனக்கென எதுவும் இல்லாதவன். சந்தோஷம் நிறைந்தவன். படங்களில் வரும் பணக்காரர்கள் பெரும்பாலும் சுயநலமும் பேராசையும் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களை காக்க போலீஸ் நாடோடியையும் ஏழைகளையும் ஒடுக்கும். சுருங்க சொன்னால், பணக்காரனுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பை எதிர்த்து கலகம் செய்து ஒரு நாடோடி எப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான் என்பதே கதைகளின் அம்சமாக இருந்தது.

நாடோடி கதாபாத்திரத்தை பற்றி கேட்டபோது ஒருமுறை சாப்ளின், “அந்த நாடோடி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சுத்தியிருக்கற மனித மிருகங்கள் அவனை எப்படி ஒடுக்க முயற்சி செஞ்சாலும் எப்பவுமே சுயமரியாதையோட இருக்கறவன்தான் அவன்’ என்றார்.

அமெரிக்காவின் மூக்கு வியர்த்தது.

FBI என்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனம் 1922ஆம் ஆண்டிலிருந்து சாப்ளின் பற்றிய தகவல் அனைத்தையும் திரட்டியது. மொத்தமாக 1900 பக்கங்களுக்கு தகவல்கள் தேறின.

குறிப்பாக ஃபாசிசம் உலகத்தை அச்சத்துக்குள் தள்ளிவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் இத்தாலியிலிருந்து ஹிட்லரின் ஜெர்மனி வரை எல்லா இடங்களிலும் பாசிசத்தை நேருக்கு நேர் சமர் புரிந்து கொண்டிருந்தது வேறு எவருமல்ல. கம்யூனிஸ்ட்டுகளே.

“அமெரிக்காவால் எதிர்க்க முடியாதவரை எதிர்த்து படமெடுத்த சாப்ளின்” : கடைசியில் அமெரிக்கா பணிந்தது ஏன்?

ஹிட்லரையே கேள்விக்குட்படுத்தி சாப்ளின் எடுத்த Great Dictator பாராட்டு விழாவில் பேச்சை தொடங்கும்போதே, சாப்ளின் ‘தோழர்களே’ என்ற வார்த்தையுடன் தொடங்கினார். ‘கம்யூனிஸ்ட்டுகளும் நம்மைப் போன்ற எளிய மனிதர்களே. அழகையையும் வாழ்க்கையையும் விரும்பும் இயல்பான மனிதர்களே!’ என பேசினார். ‘கம்யூனிசம் உலகம் முழுக்க பரவிவிடும் என பயப்படுகிறார்கள். பரவட்டுமே. என்ன ஆகிவிடப் போகிறது?’ என்றார். மேலும், ‘நான் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவானவன் எனச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்!’ எனவும் அறிவித்தார்.

அமெரிக்கா கூட ஹிட்லரை எதிர்க்கத் துணிந்திராத காலத்திலேயே அவரை எதிர்த்துப் படம் எடுத்தவர் சாப்ளின். அத்தகைய மனிதர் கம்யூனிசத்துக்கு சார்பாக பேசியதுமே, தானும் ஹிட்லருக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என அமெரிக்கா காட்டியது. சாப்ளினின் படங்களுக்கு தடை விதித்தது.

சாப்ளினுக்கும் பெரிய வருத்தம் இருக்கவில்லை. ஐரோப்பாவிலேயே வாழ்ந்தார். சந்தோஷமாகவே வாழ்ந்தார். கம்யூனிசத்தை கண்டு அமெரிக்கா கொள்ளும் பயத்தை நக்கலடிக்கும் காட்சிகளுடன் படங்களையும் கூட எடுத்தார்.

அமெரிக்கா சாப்ளினை புறக்கணித்தது. ஆனால் மக்கள் சாப்ளினை கொண்டாடினர். மக்களின் உணர்வை அமெரிக்காவால் வெல்ல முடியவில்லை. மக்களின் உணர்வு சாப்ளின் பேசும் அரசியலின் பக்கமே என்றும் நின்றிருக்கிறது. வேறு வழியே இல்லாமல் அமெரிக்கா சாப்ளினை மீண்டும் அழைத்துக் கொள்ள வேண்டிய காலம் நேர்ந்தது. சாப்ளினின் 72ஆம் வயதில், வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்கு வழங்கி தன் பாவத்தை கழுவ முயற்சித்தது அமெரிக்கா. சாப்ளின் அதையும் ஏற்றார்.

மகத்தான கலைஞன் ஒருவனின் மனிதத்துக்கு முன் அமெரிக்கா தலைகுனிந்து நின்றது.

“அமெரிக்காவால் எதிர்க்க முடியாதவரை எதிர்த்து படமெடுத்த சாப்ளின்” : கடைசியில் அமெரிக்கா பணிந்தது ஏன்?

அமெரிக்கா தொடங்கி, இந்தியா வரையிலான உலக நாடுகளின் அரசுகள் ஒடுக்குமுறையைக் கைவிடவில்லை. பாசிசத்தை மனமுவந்து ஏற்பதை நிறுத்திவிடவில்லை. பொருளாதாரம், சமூகநீதி, மனிதம் என எதைப் பேசினாலும் ஒடுக்க ஓடிவரும் பாசிசம் உலகம் முழுக்க மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வருகிறது. ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்து நம் பக்கம் வாழ்க்கை முழுக்க நின்று போராடிய ஒரு நாடோடியை நாம் மறந்துவிட முடியாது. அவன் பேசிச் சென்றதை மறந்துவிட முடியாது.

”வீரர்களே... முரடர்களுக்கு நீங்கள் ஒத்துழைக்காதீர்கள். உங்களை அவமதித்து அடிமைப்படுத்தி நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும், என்ன உணர வேண்டும் என கட்டளை இடுபவர்களுக்கு அடிபணியாதீர்கள். மாடுகளைப் போல் உங்களுக்கு தீவனம் போட்டு வேலை வாங்கி, போர்முனையில் பலி கொடுப்பவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள். செயற்கையான மனிதர்களிடம் உங்களை ஒப்புக் கொடுக்காதீர்கள். இவர்கள் இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள். நீங்கள் இயந்திரங்கள் அல்ல. நீங்கள் மாடுகள் அல்ல! நீங்கள் மனிதர்கள். உங்களின் இதயங்களில் மனித குலத்துக்கான நேசத்தை கொண்டிருப்பவர்கள். நீங்கள் வெறுப்பு கொண்டவர்களில்லை. நேசிக்கப்படாதவர்கள் மட்டுமே வெறுப்பைக் கொண்டிருப்பார்கள். வீரர்களே... அடிமைத்தனத்துக்காக போராடாதீர்கள்! சுதந்திரத்துக்காக போராடுங்கள்!

மக்களே.. உங்களிடம்தான் அதிகாரம் இருக்கிறது. இயந்திரங்களை உருவாக்கும் அதிகாரமும் மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தியும் உங்களிடம்தான் இருக்கிறது. வாழ்க்கையில் விடுதலையையும் அழகையும் அற்புதத்தையும் கொண்டு வரும் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது.

ஜனநாயகத்தின் பெயரால் நாம் அந்தச் சக்தியை பயன்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஒரு புதிய உலகத்துக்காகப் போராடுவோம். எல்லா மனிதர்களுக்கும் வேலைகளையும் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுக்கும் நாகரிக புது உலகத்துக்காக போராடுவோம். இவற்றையெல்லாம் தருவதாக உறுதி கொடுத்துத்தான் முரடர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். எல்லாம் பொய். அவர்கள் கொடுத்த எந்த உறுதியையும் நிறைவேற்றவில்லை. எதையும் நிறைவேற்றவும் மாட்டார்கள்.

கொடுங்கோலர்கள் அவர்களுக்கான விடுதலையை அடைந்து கொள்வார்கள். ஆனால் மக்களை அடிமைப்படுத்துவார்கள். புது உலகுக்காக நாம் போராடுவோம். உலகை விடுவிக்கப் போராடுவோம். நமக்குள் இருக்கும் பிரிவினைகளையும் பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும் அழிக்கப் போராடுவோம். பகுத்தறிவு கொண்ட உலகை உருவாக்கப் போராடுவோம். மக்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கும் அறிவியலையும் வளர்ச்சியையும் கொண்ட உலகைப் படைக்கப் போராடுவோம். வீரர்களே... ஜனநாயகத்தை காப்பதற்கென நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!”

கம்யூனிசமோ மனிதநேயமோ சரியாகச் சொல்வதெனில் சாப்ளின் பேசியதைத்தான் இன்றும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

Related Stories

Related Stories