உலகம்

‘இலுமினாட்டி’ கதை தொடங்கியது எப்படி? : உண்மையிலேயே அப்படி ஒரு குழு இருக்கிறதா?

‘இலுமினாட்டி’ என்ற கருத்துருவின் தொடக்கம் குறித்த தகவல் ஒன்று ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

‘இலுமினாட்டி’ கதை தொடங்கியது எப்படி? : உண்மையிலேயே அப்படி ஒரு குழு இருக்கிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இலுமினாட்டி என்ற ரகசியக் குழுவே உலக அரசியலை இயக்குவதாக ஒரு கருத்து சில நூற்றாண்டுகளாக பரப்பப்பட்டு வரும் நிலையில், ‘இலுமினாட்டி’ என்ற கருத்துருவின் தொடக்கம் குறித்த தகவல் ஒன்று ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

Principia Discordia என்ற பெயரில் ஒரு சிறு புத்தகம் 1960-களில் பரவியது. ஹிப்பிகள் என்ற ஓர் அவநம்பிக்கை தலைமுறை உருவாகி, சமூகத்துக்கு வெளியே குழுக்களாக வாழ்ந்த காலகட்டம் 1960கள். அக்காலகட்டத்தில் பரப்பப்பட்ட பிரின்சிப்பியா டிஸ்கார்டியா என்ற புத்தகம் அடிப்படையில் ஒரு ‘பகடி’ மதம். அதாவது மதத்தை போலவே புராண கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றைக் கொண்டு சமூகத்தின் எல்லாவற்றையும் புறக்கணிக்கச் சொல்லும் வேடிக்கை மதம். புத்தகம் மூன்று பேரிடம் கிடைக்கிறது. அதற்குப் பிறகுதான் தற்போதைய இலுமினாட்டி என்ற கருத்தியல் உருவானது.

அந்த மூன்று பேர் ப்ராம்வெல், வில்சன் மற்றும் கெரி தார்ன்லி. அவர்களைப் பொறுத்தவரை உலக சமூகங்கள் எல்லாமும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட எதெச்சதிகாரத்துக்கு பழக்கப்பட்டிருந்தன. ‘எல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்ற ஒரு அசமந்தமான மனநிலை மக்களிடம் இருந்தது. அரசுகள் யாவும் அதிகாரங்களை முழுமையாக பிரயோகித்து ஒடுக்கும்போதும் கேள்வி கேட்கவென எவரும் முன்வரவில்லை.

சமூகங்களுக்குள் இருக்கும் கட்டுப்பாட்டை குலைக்க மூவரும் முடிவு செய்தனர். திரிக்கப்பட்ட செய்திகளாலும் மறைக்கப்பட்ட உண்மைகளாலும் மட்டுமே மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்த முடியுமென நம்புகின்றனர். அதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் இலுமினாட்டி பற்றிய செய்திகள்.

ப்ளே பாய் என்ற பத்திரிகையில் வில்சன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இலுமினாட்டி பற்றிய கேள்விகளைக் கேட்டு வாசகர்கள் கடிதங்கள் அனுப்புவதைப் போல அவர்களே அனுப்பத் தொடங்கினார்கள். அக்கடிதங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்களே அனுப்பினார்கள்.

அம்முயற்சியை பற்றி விவரிக்கையில் ப்ராம்வெல், ‘ஒரு தகவலை பற்றி பல முரணான விஷயங்களை தத்துவ ரீதியாகவும் பொருந்துவது போலவும் திரித்து கொடுக்கும்போது, மக்கள் சந்தேகமடையத் தொடங்குகிறார்கள். இதுநாள் வரை தாங்கள் நம்பி வந்த செய்திகள் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள்.’ என்கிறார்.

‘இலுமினாட்டி’ கதை தொடங்கியது எப்படி? : உண்மையிலேயே அப்படி ஒரு குழு இருக்கிறதா?

ராபர்ட் ஷியா என்பவருடன் சேர்ந்து வில்சன் மூன்று புத்தகங்களை எழுதினார். பெயர் Illuminatus Trilogy. இலுமினாட்டி குழுதான் புத்தகங்களின் அடிப்படை. பதினெட்டாம் நூற்றாண்டின் இலுமினாட்டி அல்ல; பதிமூன்று குடும்பங்களே உலகத்தை ஆள்கிறது எனச் சொல்லும் இலுமினாட்டி. அப்புத்தங்களின் வழி வில்சன் தான் விரும்பிய திரிபு மற்றும் முரணான கருத்துகளை ஏற்கனவே சமூகம் அறிந்திருந்த செய்திகள் மீது வைத்தார். ஜான் எஃப் கென்னடியின் கொலை, பிரஞ்சு புரட்சி என நாமறிந்திருந்த எல்லா வரலாற்றுத் தகவல்களுக்கும் வேறொரு கோணத்தைக் கொடுத்தார்.

புத்தகங்கள் பெரும் வெற்றி பெற்றன. அவற்றைத் தழுவி நாடகங்கள் எடுக்கப்பட்டன. ஊடகங்களுக்குள் ‘பதிமூன்று குடும்பங்களின் ரகசியக்குழு’ என்ற கதை பெரும் செல்வாக்கை பெற்றது. பல பிரபலங்கள் இலுமினாட்டி முத்திரைகள் எனச் சொல்லப்படும் முத்திரைகளை பிரதிபலிக்கத் தொடங்கினர்.

அசமந்த நிலையில் இருந்து மக்கள் விழிப்படைந்து அதிகாரத்தை கேள்வி கேட்கும் வழியென தொடங்கப்பட்ட விஷயம், அதை உருவாக்கியவர்களே விரும்பாத வேறொரு வடிவத்தை அடைந்தது.

2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அமெரிக்காவின் பாதி ஜனத்தொகை ஏதோவொரு ஒரு இலுமினாட்டி பாணி கற்பனைக் கதையையேனும் நம்புவது கண்டறியப்பட்டது. எந்த அரசுகளை உலுக்க எதிர்கேள்விகள் கேட்கும் பொருட்டு ‘பதிமூன்று குடும்பங்களின் இலுமினாட்டி குழு’ என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டதோ, அதே அரசுகள் தங்களை அதிகாரங்களில் இருத்திக் கொள்வதற்கு அவற்றை பயன்படுத்துவதுதான் நாம் வந்து சேர்ந்திருக்கும் இக்கட்டான நிலை.

மூவரில் ஒருவரான ப்ராம்வெல், ‘வில்சன் இன்று உயிரோடு இருந்தால், சந்தோஷப்படுவதை விட, அவர் அதிர்ச்சியடைவதற்கே வாய்ப்புகள் அதிகம்’ என்கிறார்.

banner

Related Stories

Related Stories