பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் நகரில் வசித்து வருபவர் துஷார் சக்ஸேனா (Tushar Saxena). ஊடகவியலாளரான இவருக்கு கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதுவும் நொய்டா அருகே இருக்கும் கௌதம புத்தா நகருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம் என்று வந்துள்ளது.
ஆரம்பத்தில் இது தவறாக வந்ததாக எண்ணிய துஷார், பின்னர் தொடர்ந்து பலமுறை அபராதம் நிலுவையில் இருப்பதாகவும், விரைந்து அதனை செலுத்துமாறும் குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இதுகுறித்து நொய்டா போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.
அதோடு இந்த அபராத தொகையை விரைந்து செலுத்தவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு செல்ல நேரிடும் என எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். துஷார் சக்ஸேனா, நொய்டாவில் இருந்து 200 கி.மீ. தள்ளயிருக்கும் தான், இதுவரை கௌதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை என்றும், காரில் ஹெல்மெட் அணிய கட்டாயம் என்று சட்டம் உள்ளதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த செய்தி தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், பாரத்புர் பகுதியில் மாருதி ஆம்னி மினிவேனில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினார்.
அதோடு கடந்த மே மாதம் உ.பி-யின் ஜான்சி பகுதியில் வசிக்கும் பகதூர் சிங் பரிஹார் என்பவருக்கு, ஆடி காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்தது உ.பி. போலீஸ். இதையடுத்து அவரும் ஹெல்மெட் அணிந்தே காரை ஓட்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.