வைரல்

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?

இன்றொரு நாள், உணவு செயலி மேப்பில் பைக் இல்லையென்றால், உரிமைக்காக போராடுகிறான் சக மனிதனென சந்தோஷப்படுவோம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஸ்விகி ஊழியர்கள் இன்று ஸ்ட்ரைக்: காரணம் தெரியுமா?

இன்று உங்களின் ஸ்விகி செயலியில் டெலிவரி ஏஜெண்ட்டின் பைக் இருக்காது.

கடந்த சில வாரங்களாக உணவு ஆர்டர் பண்ண முயலும்போது உணவு செயலிகளில் டெலிவரி ஏஜெண்ட் கிடைக்கவில்லை என்கிற மெசேஜ் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். அருகே இருக்கும் ஹோட்டலிலிருந்து உணவகத்தை ஆர்டர் செய்தால், ஏஜெண்ட் கிடைக்கும் வாய்ப்பிருக்கலாம் என எண்ணி அருகாமை ஹோட்டலை தேர்ந்தெடுத்தாலும் டெலிவரி ஏஜெண்ட் கிடைக்கவில்லை என்கிற மெசேஜ்தான் கிடைத்திருக்கும்.

காரணம், டெலிவரி ஏஜெண்ட்களுக்கான உரிமைகளை அந்த செயலி நிறுவனங்கள் மதிக்கவில்லை என்பதுதான்.

டெலிவரி ஏஜெண்டுகளுக்கெல்லாம் உரிமை இருக்கிறதா என ஆச்சிரியப்படலாம். நம்மை பொறுத்தவரை டெலிவரி ஏஜெண்ட்கள், உணவு செயலி மேப்பில் நகரும் சின்ன கார்ட்டூன்கள்தாம். அவர்களுக்கு உரிமைகள் இருக்குமா என்பதே நமது சிந்தனையை தாண்டிய விஷயம். பசியில் உணவு வருவது தாமதமானால் வேகவேகமாக டெலிவரி ஏஜெண்ட்டுக்கான மதிப்பீடு நட்சத்திரங்களை குறைத்து கோபத்துடன் அழுத்தும் நமக்கு அவர்கள் உயிருள்ள மனிதர்கள் என்பதை புரிய வைப்பதற்கான ஒருநாள் நிறுத்தம்தான் இன்று நடக்கிறது.

அவர்கள் மனிதர்கள்தான், அவர்களுக்கும் உரிமைகள் இருக்கிறது.

நாம் போக்குவரத்து நெரிசலில் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது அநேகமாக அதிகமாக நாம் திட்டுபவர்கள் இந்த டெலிவரி ஏஜெண்ட்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் குறுக்கு மறுக்காக எந்த போக்குவரத்து விதியையும் பொருட்படுத்தாமல், வேகமாக சென்று கொண்டிருப்பார்கள். காவலர்களுக்கு டெலிவரி ஏஜெண்ட்களை கண்டால் இன்னும் சந்தோஷம். வண்டியை அப்படியே லாவகமாக ஓரங்கட்டி அபராதப் பட்டியலை வாசிக்கத் தொடங்குவார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?

சில மாதங்களுக்கு முன், ஒரு உணவு செயலி நிறுவனம், ‘உங்களின் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் கிடைக்கும்’ என புதிய ஆஃபரோடு விளம்பரம் செய்தது நினைவிலிருக்கலாம். அதாவது விமானத்தையே டெலிவரி ஏஜெண்ட் ஓட்டி வந்தாலும் கூட, Runway, Take off எல்லாம் கடக்க 30 நிமிடங்களேனும் ஆகும். ஆனால் இருசக்கர வாகனம் கொண்ட ஊழியர்கள் பத்து நிமிடங்களில் ஆர்டரை கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். பிறகு பலத்த எதிர்ப்புக்கு பிறகு அந்த ஆஃபர் திரும்பப் பெறப்பட்டது. எனினும் அந்த நடைமுறை அதிகாரப்பூர்வமற்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதாவது ஆர்டர் செய்து செயலியில் குறிப்பிடப்படும் நேரத்துக்கு குறைவாக டெலிவரி ஏஜெண்ட் உணவை கொடுத்துவிட்டால் அவருக்கான நட்சத்திர மதிப்பீடு ஏறும். வருமானம் ஏறாது. நட்சத்திரம் குறைந்தால், அந்த ஏஜெண்ட்டுக்கான ஆர்டர்கள் குறையும். விளைவாக வருமானம் குறையும். ஆகவே அவர் வேறு வழியின்றி விழுந்தடித்துக் கொண்டு வாகனம் ஓட்டுவார். அங்கு குறுக்கே வரும் ட்ராபிக் போலீஸாருக்கு இவர்கள் ‘அல்வா’வைப் போல. ஏனெனில் போலீஸாருக்கு தெரியும், இந்த ஏஜெண்ட்களை மரித்தால், தட்டி கேட்பதற்கு நிறுவனமோ வாடிக்கையாளரோ எவரும் வர மாட்டாரென. அவர்கள் நாதியற்றவர்கள் என தெரிந்து காவலர்கள் ஆனந்த தாண்டவமாடி அவர்களை சாலையில் மறிப்பார்கள். வேறு வழியின்றி, சொந்தக் காசில் தண்டம் அழுது, மீண்டும் வேகம் பிடிக்க வேண்டும். இல்லையெனில், ஆர்டர் தாமதமாவதாக சொல்லி வாடிக்கையாளர் நட்சத்திரங்களை குறைத்து விடுவார். வருமானம் குறைந்து விடும்.

ஆயிரமே இருந்தாலும் இவற்றையெல்லாம் ஒப்புக் கொண்டுதானே அந்த ஏஜெண்ட் வேலைக்கு வருகிறாரென என நவதாராளவாத மமதையுடன் நாம் பேசலாம். ஆனால் இந்த உணவு செயலிகள் வாடிக்கையாளர்களையும் விட்டு வைப்பதில்லை.

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆர்டர் வேகமாக வர வேண்டுமென்றால், அதற்கு ஒரு கட்டணம் கட்ட வேண்டும். உணவகம் சில கிலோமீட்டர் தாண்டி இருந்தால், ஒவ்வொரு கிலோமீட்டருக்குமென சேர்த்து உணவு விலையுடன் டெலிவரி பார்ட்னருக்கான கட்டணமாக கேட்கப்படும். ஆனால் அந்தக் கட்டணத்தை ஏன் வாடிக்கையாளர் கொடுக்க வேண்டும்… நிறுவனம்தானே கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி நமக்குள் தோன்றாது. அதையும் விட குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி வேகமாக வந்து சேரும் ஏஜெண்ட்களுக்கு ஐந்து நட்சத்திரங்களையும் கொடுத்து விட்டோமெனில், ‘ஏஜெண்டுக்கு டிப்ஸ் கொடுத்து ஆதரவளியுங்கள்’ என வேறு ஒரு குறிப்பு இறுதியில் வரும்.

ஓர் உணவை கொண்டு வந்து சேர்ப்பதில் மொத்த பொறுப்பையும் டெலிவரி ஏஜெண்ட் தலையிலும் அவருக்கான வெகுமான பொறுப்பை வாடிக்கையாளர் தலையிலும் கட்டுவதுதான் உணவு செயலிகளின் சூட்சுமம்.

அடிப்படையில் உணவு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன்னளவில் ஒரு முதலாளி போன்ற உணர்வுக்கேறி அந்த டெலிவரி ஏஜெண்ட்டை விரட்ட வேண்டுமென உணவு செயலி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நுட்பமான இந்த முதலாளித்துவ சதி வலைக்குள்தான் டெலிவரி ஏஜெண்டுக்கான உரிமைகள் புதைக்கப்படுகின்றன. சுவாரஸ்யம் என்ன தெரியுமா? இச்செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர் உரிமையும் இதில் புதைக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு முதலாளிக்கான உணர்வில் மிதப்பதால், நம் தலைகளில் அரைக்கப்படும் மசாலாவின் மணம் உறைப்பதில்லை.

நீங்கள் ஆர்டர் செய்யும் உணவில் குறை இருக்கலாம். கடைசிக் கட்டத்தில் ஆர்டர் நிராகரிக்கப்படலாம் (reject). இதிலும் ஒரு துயரம் இருக்கிறது. இவற்றை பற்றிய புகார் கொடுக்க வேண்டுமெனில் வாடிக்கையாளர், செயலியில் நிறுவன ஊழியர்கலுடன் chat மட்டும்தான் செய்ய முடியும். நேரடியாக தொலைபேசியில் ஓர் ஊழியரை பிடித்துவிட முடியாது. அதிகபட்சமாக டெலிவரி ஏஜெண்டை தொலைபேசியில் பிடிக்கும் வாய்ப்புதான் வாடிக்கையாளருக்கு இருக்கும். உணவு நிறுவனமாக இரக்கப்பட்டு முடிவெடுத்து அழைத்தால்தான் உண்டு.

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?

போலவே உணவகங்களில் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு தீர்ந்து போய்விட்டால், சற்று நேரம் கழித்து உங்களின் ஆர்டர் reject செய்யப்படும். உணவகத்தார் அழைப்பை ஏற்க மறுக்கலாம். ஆகவே உங்களின் புகார்கள் எதுவும் பதிலளிக்காமல் ஓர் இயந்திரத்துடன் chat செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள். உங்களின் கோபத்தை காட்டவென உங்களுக்கு அளிக்கப்படும் ஒரே செல்பேசி எண், வேறு வழியின்றி அழைப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நபரான டெலிவரி ஏஜெண்ட்டுடையாகதான் இருக்கும். துயரம் என்னவெனில் உங்களின் கோபத்தை ‘காச் மூச்’சென கத்திய பிறகும் அவர் இயல்பாக எழும் கோபத்தை கூட காட்டிவிடக் கூடாது. ஏனெனில் நட்சத்திரம் பறிபோகும்.

நொய்டாவில் ஒரு ஸ்விகி ஏஜெண்ட்டை கார் இடித்து, 1 கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றது. ஏஜெண்ட் இறந்துவிட்டார்.

ரிஸ்வான் என்னும் ஏஜெண்ட் உணவு கொடுக்க சென்றபோது வீட்டிலுள்ள நாய் விரட்டி, தப்ப முயன்று மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார்.

இன்னொரு இடத்தில் ஒரு பெண், உணவு தாமதமாக வந்ததற்காக ஏஜெண்டை அசிங்க அசிங்கமாக திட்டி, இறுதியில் ஒரு வீடியோவில் ஏஜெண்ட் தன்னை அடித்து விட்டதாக பொய் சொல்லி வைரல் ஆக்கி, ஏஜெண்ட்டின் வேலையே பறிபோகும் நிலைக்கு போனது.

இவையெல்லாம் நாம் சமூக ஊடகங்களில் சமீபத்தில் எதிர்கொண்ட செய்திகள்தாம். இத்தகைய சூழல்களுக்குள் ஆட்பட்டு, நாய் விரட்டி சாக வேண்டிய நிலைமையில் நாதியற்று போன தனக்கான உரிமைகளை கேட்டுதான் இன்றைய போராட்டத்தை உணவு செயலி ஊழியர்கள் நடத்துகின்றனர். கோரிக்கைகளும் வைத்திருக்கின்றனர்:

தமிழ்நாடு முழுவதும் இன்று Swiggy ஊழியர்கள் போராட்டம்.. என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு?

- பழைய ஊதிய முறை வழங்கப்பட வேண்டும்

- ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 ரூபாய் வழங்க வேண்டும்.

- ஒவ்வொரு ஆர்டருக்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்கப்பட வ்ணேடும்.

- உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்ற தகவல் கொடுக்கப்படக் கூடாது.

- உணவு தீர்ந்து போய்விட்டால், ஆர்டர் cancel செய்யப்பட வேண்டும். Reject பண்ணப்படக் கூடாது.

- உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி வேண்டும்.

- உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகள்!

உணவு செயலி நிறுவனத்தின் பங்குகளை கேட்குமளவுக்கான கோரிக்கைகள் கிடையாது. மிகவும் அடிப்படையான, மாறிவரும் வாழ்க்கைச்சூழலும் விலைவாசியும் கருத்தில் கொண்டு கேட்கப்படும் கோரிக்கைகள். இவை ஜெயிக்க வேண்டுமெனில் நாம் ஒருநாள் உணவு செயலி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இன்றொரு நாள், உணவு செயலி மேப்பில் பைக் இல்லையென்றால், உரிமைக்காக போராடுகிறான் சக மனிதனென சந்தோஷப்படுவோம்.

சக மனிதனை இயந்திரமாகவோ மேப்பில் பயணிக்கும் பொம்மையாகவோ நமக்கான அடிமையாகவோ கருத வைக்கும் சிந்தனையை அறுத்தெரிய வேண்டும்.

வாடிக்கையாளர் உரிமைகளுக்கான குரலையும் முன்னெடுக்கத் தொடங்குவோம்.

banner

Related Stories

Related Stories