Declassify எனவொரு வார்த்தை இருக்கிறது. பொதுவாக ரகசியங்களை வெளிக்கொணர்வதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தை. இதை சமூக வரலாற்றுக்கு பயன்படுத்தினால் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு புது வெளிச்சம் கிடைக்கும்.
உதாரணமாக தன் சாதி! தான் பிறந்த சாதியை எக்காரணம் கொண்டும் மறைக்காமல், வெளிப்படுத்தி அது வரலாறு முழுக்க செய்த ஒடுக்குமுறைகளையும் அழிச்சாட்டியங்களும் அதே நேர்மையோடு வெளிப்படுத்தி அந்த அடையாளத்திலிருந்து தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது ஒரு வகை declassificationதான்.
தனக்கென பிறப்பிலிருந்து வரும் அல்லது திணிக்கப்படும் மதம், சாதி முதலிய அடையாளங்களை புறக்கணிப்பதிலிருந்துதான் நாம் கனவு காணும் சமூகத்தை உருவாக்க முடியும். இன்னும் ஒரு படி மேலே போய், தான் பிறந்த சாதியின் வரலாற்று அட்டூழியங்களை இன்றும் பிரதிநிதித்துவப்படுத்தி பேசி, நியாயம் மற்றும் நீதியை நோக்கி இச்சமூகத்தை நகர்த்துவது வேறெவெரைக் காட்டிலும் சாதியிலிருந்து declassify செய்தவரால் மட்டுமே முடியும். Declassify செய்வதன் தேவையும் அதுவே.
மாறாக தான் பிறந்த சாதி பெயரின் முதல் எழுத்தை கூட வெளியில் சொல்லாமல், பொத்தாம் பொதுவாக சாதி மறுப்பு பேசுவது, இச்சமூகத்தில் இருக்கும் தற்போதைய நிலையை மேலும் நீட்டிக்க மட்டுமே செய்யும். அப்படி சுய அடையாளத்தை பேசுபவர்களின் நோக்கமும் அதுதான். ஏனெனில் சாதி கொடுக்கும் அனுகூலங்களை போலவே, சாதி மறுப்பு அனுகூலங்களும் அதிகம். அந்த அனுகூலங்களில் வாழ விரும்புபவர்கள் சொந்த சாதியை பகிரங்கப்படுத்த மாட்டார்; பகிஷ்கரிக்கவும் மாட்டார்.
இதற்குள் ஊடாக ஒரு கூட்டம், ஒடுக்கப்பட்டோர் தங்களின் சாதியை தூக்கி பிடிப்பது சுயசாதி பெருமை ஆகாதா என குறுக்குசால் ஓட்டுவார்கள். சுயசாதி பெருமை எவருக்கும் இழிவுதான். ஆனால் ஒடுக்கப்பட்டோர் தங்களின் அடையாளத்தை பெருமைக்கு தூக்கி சுமக்கிறீர்களா அல்லது நியாயம் தீர்க்க தூக்கி சுமக்கிறார்களா என புரிந்துகொள்வதுதான் சமூக நீதிக்கான பாதை. ஆதிக்க சாதியில் பிறந்து சுய சாதியை பகிரங்கப்படுத்தி புறக்கணிப்பதும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து சுய சாதியை பிரகடனப்படுத்தி ஆயுதமாக்குவதும் ஒரே காரணத்துக்காகவே. சாதியால் நிகழ்த்தப்பட்ட ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் வரலாற்றில் அடையாளம் கண்டு, அழித்தொழித்து சமத்துவ சமூகத்தை படைக்கும் காரணம்!
பிறப்பால் வந்து சேர்ந்த சாதி, மதம் போலவே பாலின அடையாளங்களும் declassify செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி; ஆதிக்க சாதி பெண்ணானாலும் சரி.
தனக்கு பிறப்பின் வழியாக சுமத்தப்பட்ட அடையாளங்களை உதிர்ப்பது மட்டுமல்லாமல், அந்த அடையாளங்கள் வரலாற்றிலும் சமூகத்திலும் நிகழ்த்திய/நிகழ்த்தும் அட்டூழியங்களை தோலுரித்து காட்ட வேண்டும். சுயசாதி புறக்கணிப்பில் தொடங்கும் பயணம், தான் கொண்ட சாதி அடையாளத்தால் பெறக்கூடிய அல்லது வந்து சேரும் அனுகூலங்களை புறக்கணிப்பதாகவும் தொடர வேண்டும்.
Declassifying one self என்பதுதான் உண்மையான சமூக மாற்றத்துக்கு வழிகோலும்!