தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலை அரங்கில் இன்று (18.07.2025) தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் "தமிழ்நாடு நாள் விழாவில்", மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :
திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளுடனும், இன்றைக்கு உங்களுடைய வாழ்த்துகளுடனும் சிறப்பாக தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், தமிழ்நாடு நாள் விழா என்கிற வகையில் மட்டுமல்லாமல், ஒரு முப்பெரும் விழா நிகழ்ச்சியாக நம்முடைய அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், உதவி தொகை வழங்கும் நிகழ்வாக அதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சியாகவும், பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி என்கிற வகையில் கலந்து கொண்டு அதில் பரிசுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வில் இந்த முத்தமிழ் மன்ற மன்றத்தில் ஒரு முப்பெரும் விழா நிகழ்ச்சியாக நடைபெறும் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் முதலில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த வாய்ப்பை உருவாக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், காங்கேயம் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கும், உங்களுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சம் நிமிர்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, முதல் ஆண்டு கொரானா தொற்று என்ற வகையில் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப்பிறகு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், மெல்ல, மெல்ல அந்த நோயிலிருந்து மக்கள் விடுபட்டு, இதுபோன்ற நிகழ்ச்சியை ஒரு அரங்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதற்குப்பிறகு, இன்றைக்கு பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழ்நாடு வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் நான் இந்த நேரத்தில் சொன்னால் நேரம் காணாது. ஏனென்றால், நீங்களும் ஆவலோடு இங்கே நம்முடைய கருத்தரங்கை காண இருக்கிறீர்கள். அந்த வகையில், இந்த சிறப்பான நிகழ்ச்சி உங்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இங்கே எனக்கு முன்னால் பேசிய நம்முடைய இயக்குநர், செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் அறிந்தவர்கள் தான். எனவே, இன்றைக்கு இதை யாரும் அறியாதவர்கள் இல்லை. இன்றைக்கு தமிழ்நாடு விழாவை நாம் எதற்காக கடைப்பிடிக்கிறோம் என்பதை நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் சொன்னதுபோல, எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை கடந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது.
அந்த வகையில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று அன்றைக்கு சங்கரலிங்கனார் அவர்கள் ஏறத்தாழ 77 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரை மாய்த்து, இந்த தமிழ்நாடு என்ற பெயரை வைப்பதற்கு ஒரு காரணமாக இருந்தார். அது போன்ற எண்ணற்றவர்கள்.
அதுபோல நம்முடைய தாய்மொழி - இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அனைவரும் அறிவீர்கள் - அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் - தமிழ் மொழிக்காக, மொழி அழிக்கப்படுவதை கண்கூடாக பார்க்கும் பொழுது அதற்காக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அன்றைக்கு ஹிந்தி என்ற போர்வையில் திணித்து, அந்த தமிழை மெல்ல, மெல்ல அழிப்பதற்கு நினைத்தவர்களுக்கு எல்லாம் ஒரு எதிர்ப்பை தெரிவித்து, தன்னுடைய இன்னுயிரை மாய்த்த ஒரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.
அந்த வகையில், இன்றைக்கு தமிழ்நாடு என்கிற பல்வேறு போராட்டங்களை நாம் நிலைநிறுத்தித்தான் தமிழை பாதுகாத்திருக்கிறோம். தமிழ்நாட்டையும் பாதுகாக்கிறோம் என்கின்ற வகையில் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும், அவருடைய வழியில் நம்முடைய துணை முதலமைச்சர் அவர்களும் இதையெல்லாம் பாதுகாத்து தருகின்றார்கள். அந்த பாதுகாத்து தரக்கூடிய அந்த சொத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – அவர்களோடு உடனிருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மேலும் எப்போது பார்த்தாலும் இடையிடையே நம்முடைய தமிழ் மொழிக்கு இடையூறுகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இன்றைக்கு தமிழன் என்கின்ற அந்த உணர்வோடு அதையெல்லாம் பாதுகாத்து அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்து, மீண்டும் மீண்டும் நம்முடைய கழக அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அமைவதற்கான சூழ்நிலையை 7வது முறையாக கழகம் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். அதே நேரத்தில், முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும்.
இன்னும் இருக்கக் வேண்டிய பணிகளை நம்முடைய ஆட்சி மொழியெல்லாம் இன்றைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றது என்று சொன்னால், அன்றைக்கு கழக தலைவர் அவர்கள் எடுத்த நடவடிக்கை – அன்றைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த காரணத்தினால், இந்த செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றோம்.
இப்படிப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் அதற்கு உறுதுணை புரிந்தவர்கள் - அதற்கு அடித்தளம் இட்டவர்கள் - நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்கள், முத்தமிழறிஞர் அவர்கள், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் - எனவே அவருடைய வழியில் நாம் தொடர்ந்து பீடு நடை போடுவோம் - இந்த சொத்தையெல்லாம் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு உறுதுணை புரிவோம் என்கின்ற சூழ்நிலையில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் வலியுறுத்தி, இங்கே வந்திருக்கின்ற அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான தொகை என்பது 3500 ரூபாயாக தான் இருந்தது. இந்த நிதியாண்டில் தான் முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு பெரிய கோரிக்கையும் வரவில்லை. அதற்கான போராட்டமும் இல்லை. ஆனால், 7500 ரூபாய் இன்றைக்கு அரசாணை வழங்குவதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். ஏறத்தாழ நூறு மடங்குக்கு மேலாக, அந்த அளவுக்கு அந்தத் தொகையை உயர்த்தி, யாரும் எதிர்பாராத வகையில் அதற்கான உத்தரவுகளை வழங்கினார்கள்.
எனவே, அவருக்கும், உங்களின் சார்பாக என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வருகை புரிந்திருக்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ குழந்தைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.