
தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளியானது. 51 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கொத்தமங்கலம் சுப்பு என்கிற கலைமணி என்ற அற்புதமான எழுத்தாளரின் நாவல்தான் தில்லானா மோகனாம்பாள். தஞ்சை மாவட்டத்தில் நாதஸ்வர கலையும், நாட்டியக் கலையையும் முன்வைத்து இந்த நாவல் உருவாக்கப்பட்டது. இந்த நாவல் ஆனந்தவிகடன் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
அப்போதெல்லாம் இந்த கதையை வாசிப்பதற்காகவே தனியாக ரசிகர் கூட்டம் இருந்தது. வாராவாரம் வெளிவரும் ஆனந்தவிகடனில் தில்லானா மோகனாம்பாளை ரசிப்பதற்காகவே கதைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த அற்புத படைப்புக்கு திரைவடிவம் கொடுத்தவர் ஏ.பி.நாகராஜன். நடிகர் சிவாஜி கணேசனை கதாநாயகனாகவும், நாட்டியப்பேரொளி பத்மினியை, கதையின் நாயகியாகவும் தேர்வு செய்து தனது தேர்ந்தமொழியில் தில்லானா மோகனாம்பாளை செதுக்கி இருந்தார் ஏ.பி.என்.

மதுரை பொன்னுசாமி பிரதர்ஸ் இந்த படத்தின் பின்னணியில் நாதஸ்வரம் வாசித்து இருப்பார்கள். ‘நலந்தானா... நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா’ என்ற கண்ணதாசனின் சாகாவரிகள் பாடலாக உருவெடுத்து இசைமேதை கே.வி.மகாதேவனின் இசையில் ஆனந்தராகத்தை ரசிகர்கள் மனதில் சுழல விட்டது. பெருந்தலைவர் காமராஜர் உடல்நலம் குன்றியிருந்த போது, இந்த பாடல் அவருக்காக கண்ணதாசன் எழுதினார் என்றும்கூறி ரசிகர்கள் கொண்டாடினர்.

இதைப்போல, இப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..’ என்ற பாடலில் பத்மினியின் நாட்டியம் அவரை அணுஅணுவாக ரசிக்க வைத்தது. இன்றளவும் தில்லானா.. பாடுபவர்கள் மறக்கமுடியாத பாடல் இது.
இதுதவிர இந்த படத்தில் வரும் வைத்தி என்ற பாத்திரத்தில் ஜொலித்த நடிகர் நாகேஷ், தவில் வித்வானாக வரும் பாலையா, ஏ.கருணாநிதி ஆகியோர் தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்திற்கு மெருகு சேர்த்தார்கள் என்பதே உண்மை.
ஜில்.. ஜில் ரமாமணி என்ற கதாப்பாத்திரத்தில் பின்னியெடுத்த ஆச்சி மனோரமாவின் அற்புதமான நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இந்த படம் வெளியான பிறகு, ஆச்சி மனோரமாவை அவரது ரசிகர்களும், திரைத்துறை வட்டாரத்தினரும் ஜில்...ஜில் ரமாமணி என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்த படத்தில் வரும் ரயில் காமெடி குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த சரவெடியாக வெடித்தது. இந்த படத்தின் சாயலாக தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை அமரன் இயக்கத்தில் ‘கரகாட்டக்காரனாக’ உருவானது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாளை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த காவியம் படமாக்கப்பட்ட போது, ஒரு பிரெஞ்சு ஆவணப்படம் உருவானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி நடந்தது. ஒரு இயக்குநரின் வேலை என்ன? நடிகர்கள் மேக் அப் செய்து கொள்வது, இசைவடிவம் கையாளப்படும் முறை போன்றவை இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லானா மோகனாம்பாள் வெளியாகி 51 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆவணப்படம் தற்போது இணையவெளியில் உலா வந்து வைரலாகி வருகிறது.








