வைரல்

150 மாணவர்களுக்கு மொட்டையடித்து ‘ராகிங்’: ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை - அச்சத்தில் மாணவர்கள்! #Video

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களுக்கு மொட்டையடித்து ‘ராகிங்’ கொடுமை அரங்கேறியுள்ளது. ஆதாரம் இருந்தும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

150 மாணவர்களுக்கு மொட்டையடித்து ‘ராகிங்’: ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை - அச்சத்தில் மாணவர்கள்! #Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகளில் ராகிங் கொடுமை தடுக்கப்பட்டு விட்டதாக கல்லூரி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் ராகிங் கொடுமை இன்னும் குறைந்தபாடில்லை. மத்திய அரசு 2015ம் ஆண்டு புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் சுமார் 423 ராகிங் கொடுமைகள் நடந்துள்ளதாக தெரிவித்தது. ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் அதன் எண்ணிக்கை 901ஆக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் 14 வயது மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்குமுன், மார்ச் மாதம் 2 மாணவர்கள் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் ராகிங் கொடுமை நடந்து வருகிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டம் சைபை பகுதியில் அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்து வருகிறார்கள்.

அந்த கல்லூரியில் பல காலமாகவே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ராகிங் கொடுமை நடந்து வருகிறது. மாணவர்களை ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் இருந்தும் அம்மாநில அரசு இதனைக் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 150 பேருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி முதலாம் ஆண்டு மாணவர்கள் மொட்டை அடித்தபடி நடந்து செல்லும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொட்டை அடித்த நிலையில் வெள்ளை நிற சீருடையில் வரிசையாகச் செல்கின்றனர். கண்டிப்பு மிகுந்த பள்ளிகளில் குழந்தைகள் செல்வது போல கூனிக்குறுகி நடந்து செல்கிறார்கள்.

மாணவர்களின் இந்த நிலையைப் பார்க்கும்போதே பரிதாபமாக இருக்கிறது. அதனையடுத்து மற்றொரு வீடியோவில், சாலையில் நிற்கும் சீனியர் மாணவர்களை பார்த்தவுடன் பயத்தோடு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள்,

மேலும் வேறொரு வீடியோவில், மொட்டையடித்த மாணவர்கள் வளாகத்தினுள் நிற்கிறார்கள், அவர்களை கண்டும் காணாததுபோல் பல்கலைக்கழகப் பாதுகாவலர்கள் கடந்து செல்கின்றனர். இந்த நிகழ்வைப் பார்க்கும்போது வழக்கமான நடவடிக்கைத் தானே என அவர்கள் செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளது. இந்த வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் கூறியதாவது, “ராகிங் கொடுமை எல்லாம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகிறது. தற்போதுவரை மாணவர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை. மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தால் கூட போதும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அதனால் இந்த பிரச்னையில் கவலை வேண்டாம்” என கூறியுள்ளார்.

இதனையத்து மாணவர் அமைப்பினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், துணைவேந்தர் அளித்துள்ள விளக்கம் பொறுப்பற்றதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் அச்ச உணர்வில் தான் இருப்பார்கள், அதனால் தங்களுக்கு இழைக்கபடும் குற்றத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க பயப்படுவார்கள் எனவும், மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள வீடியோ ஆதாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories