வைரல்

திட்டியது ஏன் மனித உரிமை ஆணையம் கேள்வி - மீண்டும் அத்தி வரதரால் சிக்கலில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திட்டியது ஏன் மனித உரிமை ஆணையம் கேள்வி - மீண்டும் அத்தி வரதரால் சிக்கலில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய வி.வி.ஐ.பி-க்கள் செல்லும் வழியில் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறப்பு ஆவணம், நுழைவுச்சீட்டு எதுவும் இல்லாமல் அனுமதித்ததை அறிந்த ஆட்சியர் பொன்னையா காவல் ஆய்வாளர் ஒருவரை அவமரியாதையாகப் பேசியது கடந்த சில தினங்களுக்கு முன் வைரல் ஆனது.

காவல் ஆய்வாளரை ஒருமையில், நீ..வா...போ என பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அவரை சஸ்பெண்ட் செய்ய ஐ.ஜி.,க்கு உத்தரவிட்டார். அதேநேரம் இது தொடர்பான வீடியோ வெளியானதால், அரசு அதிகாரியை ஒருமையில் பேசிய ஆட்சியருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பொன்னையா, இதனை பெரிய விஷயம் ஆக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தன்னுடைய குடும்பத்தினரை எந்த வித அனுமதியும் பெறாமல் வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆட்சியர் பொன்னையாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த போலீஸ் அதிகாரிகளே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் என்று செய்தியும் வெளியாகியுள்ளது. இதனால், ஆட்சியர் பொன்னையாவுக்கு மீண்டும் நெருக்கடி எழுந்துள்ளது.

முன்னதாக காவல் ஆய்வாளர் செய்த தவறுக்காக, "பொதுஇடத்தில் கூச்சலிட்ட ஆட்சியர், அதே தவறை செய்துள்ளார். இவரின் மீது யார் நடவடிக்கை எடுப்பது” என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருந்ததாகவும் பொன்னையா மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆகஸ்ட 10ம் தேதி காவல்துறை ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்காகவும், அதிகார மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் ஆட்சியர் பொன்னையா மீது ராமேஸ்வரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் பிரச்னையில் சிக்கியுள்ள ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories