
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி, நேற்று டி.ஜி.பி-யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்றும் 11 கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுவை ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்து அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "பெண் IAS அதிகாரிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்யக் கோரி நேற்று (நவ. 25) டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். இன்று ஆளுநரைச் சந்தித்தும் புகார் மனு அளித்திருக்கிறோம்.
நேற்று கொடுத்த புகார் மனுவிற்குப் பிறகாவது, தூங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அருள் விக்னேஷைக் கைது செய்வார் என்று பார்த்தால், எனது பேட்டியை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்த டம்மி முதலமைச்சர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை மறைக்கத் தலைமைச் செயலாளரும், இந்த அரசும் 116 நாட்களாக முயற்சி செய்துள்ளன. இதனால், இந்த வழக்கில் எங்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம்.
குற்றத்தில் ஈடுபட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட ஆட்சியரிடம் பேரம் பேசியிருக்கிறார் தலைமைச் செயலாளர். மேலும், அவரைப் பணியிட மாற்றம் செய்யவும் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.
நமது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால் நாம் சும்மா இருந்திருப்போமா? ஆனால், ஒரு பெண் அதிகாரிக்கே அநீதி நடந்துள்ளது. இதில் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிக்குத் தீபாவளிக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்புகிறார் முதலமைச்சர் விஜய்.
த.வெ.க. ஆட்சியில் பெண் குழந்தைகள் காணாமல் போவது தினமும் ஒரு செய்தியாகிவிட்டது. கடந்த மாதம் மட்டும் 10 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். செஞ்சியில் ஒரு பெண் குழந்தை காணாமல் போய் இன்றோடு 45 நாட்கள் ஆகின்றன. குழந்தையைக் கண்டுபிடியுங்கள் என்று கேட்டால், ஜோசியரிடம் கேட்டுக் காவல் நிலையத்தில் யாகம் நடத்தும் அவலத்தில் த.வெ.க. ஆட்சி இருக்கிறது.
த.வெ.க. ஆட்சி அமைந்த 6 மாதங்களில் 9 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் கூட ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்த அரசு பொய் சொல்கிறது.
போதைப்பொருள் குற்றங்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்தான் சிக்கியிருக்கிறார்கள். IPL போட்டியின்போது மைதானத்தில் அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார். நாகையில் த.வெ.க. நிர்வாகி வீட்டிலிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதால், த.வெ.க. அரசு 'டபுள் ஆக்டிங்' செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு தி.மு.க. அரசுதான் இதனைத் துணிச்சலுடன் கையாண்டது” எனத் தெரிவித்துள்ளார்.






