
திருச்செந்தூரில் நேற்று (நவ.15) வெகு விமர்சையாக நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான பாடகர் வேல்முருகன் பங்கேற்று நேரலை வர்ணனை வழங்கினார். இந்த நேரலையின்போது பக்தர்களுக்கு முருகரின் செயல்கள், சூரசம்ஹார நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
அப்போது அவர், "முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!" என்று கூறியதோடு, "முதல்வர் விஜய்க்கு அரோகரா! அமைச்சர் ரமேஷ்க்கு அரோகரா!" என்று கூறியதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆன்மிக நிகழ்வின் வர்ணனையின்போது அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியது தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் மட்டுமின்றி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமியும், ‘விஜய்யை போல முருகன் வேல் எடுத்தார்’ என்று பேசியது முருகரை இழிவுப்படுத்தும் விதம் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி சட்டத்தையும் மதிப்பதில்லை, தங்கள் கட்சி தலைமையையும் மதிப்பதில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் நிகழ்வும் சட்ட ஒழுங்கு பிரச்சினையில் பெரும்பாலானவைகளில் தவெக-வினரே ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டையும் சட்டத்தையும் மதிக்காத தவெக-வினர், தற்போது ஆன்மிகத்தையும் கடவுளையும் தவெக அவமானப்படுத்தியுள்ளதாக பக்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
முருகனுக்கான சூரசம்ஹாரமா..? அல்லது இவருக்கு வாய்ப்பு தந்தவர்களுக்கு புகழ்பாடும் இடமா இது..? இந்த கோஷங்கள் போட சொல்லி மேலிடம் தந்த அழுத்தமா? என்று இணையவாசிகள் பலரும் கேள்விகளோடு தங்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,
"திராவிட மாடல் ஆட்சியில் சூரசம்காரம் நிகழ்வில் பக்தர்களுக்கு நல்ல ஏற்பாடு வழங்கப்பட்டது. பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் தங்கி விரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஆகம விதிகள் மீறி கடவுள் வழிபாடு தாண்டி மனித புகழ் பாடப்பட்டது, தெரு கூத்தாடிகள் புகழ் பாடினர். முழுக்க முழுக்க இது பக்தர்களுக்கான சூரசம்காரம் அல்ல; ரீல்ஸ் ஆட்சிக்கான சூரசம்காரம்.
கடந்த திராவிட மாடல் ஆட்சியில் புரட்டாசியில் வரும் பெருமாள் நிகழ்ச்சியாகட்டும், ஆடியில் வரும் அம்மன் நிகழ்ச்சியாகட்டும், மார்கழி மாத நிகழ்ச்சியாகட்டும் எங்குமே சமயங்களையும், ஆகம விதிகளையும் மீறவில்லை, முதலமைச்சர் புகழ் பாடவில்லை. இறைக் கடவுளின் புகழை தான் பாடினோம். ஆனால் தவெக ஆட்சியில் ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை.
ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி என்று சொன்ன திமுக ஆட்சி காலங்களில் ஆகமம் பின்பற்றப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழுமையாக போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். ஆனால் தவெக ஆட்சியிலோ, கடவுளே அவமதிக்கப்படுகிறார். தவெக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி. அதற்கு நேற்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வே சாட்சி!" என்றார்.






