
காவிரி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டியே தீருவோம் எனத் தொடர்ச்சியாகக் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு இருந்து வருகிறது. இப்பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம் வழிகாட்டி வருகிறது. ஆனால் அதை கர்நாடக அரசு மதிப்பது கிடையாது.
இப்படி இருக்கும்போது தமிழ்நாடு தொடர்ந்து தனது உரிமைக்காகப் போராடி வருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் கூடச் சட்டப் போராட்டங்களை நடத்தி மாநிலத்தின் உரிமைக்காகப் போராடியது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனே, தொடர்ச்சியாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், "மேகதாதுவில் அணையை நாங்கள் கட்டியே தீருவோம்" என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் த.வெ.க அரசும் தக்க பதிலடி கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. "பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினையைத் தீர்ப்பேன், நான் கர்நாடகா செல்கிறேன்" என்றெல்லாம் ஒரு நாடகம் நடத்தினார் முதலமைச்சர் விஜய். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.
தற்போது மீண்டும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், "தமிழ்நாடு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மேகதாதுவில் அணையைக் கட்டுவேன்" எனக் கூறியுள்ளார். இதற்கு உரிய பதிலை இதுவரை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் கொடுக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேகதாது பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் அமைதி காப்பதால், தமிழகத்திற்குப் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், "தமிழ்நாடு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மேகதாதுவில் அணையைக் கட்டுவேன் என்று கர்நாடக முதல்வர் சிவக்குமார் எதன் அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை" என்றார்.
மேலும், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதலமைச்சர் விஜய் மறுப்பதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.






