
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கிச் சொந்தமான ரூ.22.30 கோடி நிதி, இணையவழி மோசடி மூலம் சட்ட விரோதமாகப் எடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழக அரசு நிதி நிர்வாகத்தில் இருக்கும் பெரிய ஓட்டையை வெளிக்காட்டி இருக்கிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநகரகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் கண்காணிப்பாளராகவும் பணியாற்றும் ராம்பிரசாத், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘’துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22,30,04,879 அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ளது’’ குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 15 வது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னை நந்தனம் சி.ஐ.டி நகரில் உள்ள ஹெச்.டி.எப்.சி வங்கிக் கிளையில் அத்துறை இயக்குநர் பெயரில் தனிக் கணக்கில் இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனித்தனி பயனர் அடையாள எண்களும் கடவுச் சொற்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்டோபர் 12 முதல் 30 ஆம் தேதி வரை மர்ம நபர்கள் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து இணையப் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை மாற்றியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் பயனர் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான Maker, Checker எனப்படும் இருநிலை ஒப்புதல் முறையில் பயனர் விபரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
18 நாட்களில், மொத்தம் 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ22.30 கோடி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
‘’ ரூ.22.30 கோடி, 46 பரிவர்த்தனைகளில் மாற்றப்பட்டதை ஏன் உடனடியாக கண்டறிய முடியவில்லை? அங்கிகரிக்கப்பட்ட தமிழக அரசு அதிகாரிகளின் பயனர் பெயர், கடவுச் சொல், ஒ,டி,பி ஆகியவை எவ்வாறு கசிந்தன?’’ என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கும் த.வெ.க ஆட்சியில் இப்போது, அரசு கஜானால் இருந்த பணமும் காணாமல் போய் இருக்கிறது.






