
சென்னையில் பாரத் லஜ்னா சொசைட்டி தலைவர் பிரேம் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீட்டாளர்களின் பணத்தைத் தனிநபர் கணக்குகளுக்கும், பிற தொழில் நிறுவனங்களுக்கும் மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கேரளம் மாநிலத்தின் கோழிக்கோடு குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவுச் சங்கத்தின் (BLM) தலைவர் பிரேம்குமாரை, கோழிக்கோடு குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையால் சென்னையில் கைது செய்தனர். டிஎஸ்பி பென்னி தலைமையிலான தனிப்படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறவிருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறிய பிரேம்குமார், சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவுச் சங்கம், 2002-ஆம் ஆண்டு பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்கீழ், 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிலம் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இந்தச் சங்கம், பின்னர் சில்லறை வணிகம், ஊடகம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் விரிவடைந்தது.
இந்நிலையில், நிதி முறைகேடுகள் மற்றும் அனுமதியற்ற வணிக நடவடிக்கைகள் தொடர்பாக இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் விசாரணையில் சிக்கின.

ஓய்வுபெற்றவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி மற்றும் லாபம் கிடைக்கும் என உறுதியளித்து, இந்தச் சங்கம் முதலீடுகளைப் பெற்றதாக விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், முதலீட்டுத் திட்டங்களின் காலக்கெடு முடிவடைந்த பின்னரும் பல முதலீட்டாளர்களால் தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை எனப் புகார்கள் எழுந்தன.
முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதுடன், அந்தப் பணத்தைத் தனிநபர் வங்கிக் கணக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்குத் திருப்பிவிட்டதாகச் சங்க நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டபப்ட்டது.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய பணமோசடி மற்றும் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ரூ.5,000 கோடி அளவிலானதாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி புகார் தொடர்பாக, முதலீட்டாளர்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, பணப் பரிவர்த்தனைகள் எந்தெந்த கணக்குகளுக்குச் சென்றன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்துவிட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு டிரான்ஸ்லேட் வாரண்டிற்காக அழைத்துச் சென்றனர் அங்கு பிரேம்குமார் மயக்கம் வந்தது போன்று நடித்துள்ளார்.
இதனை எடுத்து மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அதன் பிறகு அவர் உடல்நிலை சீராக இருக்கிறது என்ற தெரிந்த பிறகு தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
பிரேம்குமாரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ட்ரான்சிட் வாரண்ட் பெறப்பட்டு கேரளாவுக்கு விசாரணைக்காக காவல்துறை அழைத்துச் செல்ல உள்ளதாக கூறியுள்ளனர்.






